March 20, 2018 findmytemple.com
சுவாமி : பிரளயகாலேஸ்வரர்.
அம்பாள் : அழகிய காதலி (ஆமோதனம்பாள், கடந்தை நாயகி), மகாலட்சுமி, சண்டிகேஸ்வரி.
தீர்த்தம் : பார்வதி தீர்த்தம், கயிலை தீர்த்தம், இந்திர தீர்த்தம், முக்குளம், வெள்ளாறு.
மூர்த்தி : சௌந்தரேஸ்வரர், மெய்கண்டார், கலிக்கம்ப நாயனார், தண்டபாணி உருவங்கள், கோடிவிநாயகர், சோமாஸ்கந்தர், விசுவேஸ்வரர், முருகன், சண்டேஸ்வரர்.
தலவிருட்சம் : செண்பக மரம்.
தலச்சிறப்பு : எங்கும் இல்லாத சிறப்பாக இத்தலத்தில் உள்ள நந்தி ஊரை நோக்கி (சிவனுக்கு எதிராக) திரும்பி இருக்கிறது. இக்கோயிலுக்குத் ‘தூங்கானைமாடம்'(கஜப் பிரஷ்டம்) என்பது பெயர். சம்பந்தர், அப்பர் ஆகியோரால் பாடல் பெற்ற தலம்.ராஜகோபுரம் 5 நிலைகளை கொண்டது.கோயிலின் முன் வாயிலில் தென்பகுதியில் குடவரை விநாயகரைத் தரிசிக்கலாம்.மதிலையடுத்து உள்ளே நந்தவனம் உள்ளது.வடபகுதியில் 30 அடி உயரமுள்ள அழகான துவஜஸ்தம்பம்,பக்கத்தில் கிழக்கு நோக்கிய பிரதோஷ நந்தி சந்நிதி உள்ளது.உள்ளே நுழைந்தால் பதினாறுகால் மண்டபம்.மூலவரின் கர்ப்பக் கிருகத்தின் விமானம் ஐராவதம் வழிபட்டதற்கு அடையாளமாக யானை நிற்பது போல் அமைந்துள்ளது. மூலலிங்கம் சுயம்பு,சற்று உயரமானது,ஆவுடையார் சதுர வடிவானது. கர்ப்பக்கிருகத்தின் முன்வாயில் தவிர, ஏனைய மூன்று புறங்களிலும் இறைவனைக் கண்டு வணங்குமாறு சன்னல்கள் பலகணிகள் அமைந்திருப்பது சிறப்புடையது. சுற்றுப்பகுதியில் உற்சவத் திருமேனிகள் காட்சியளிக்கின்றன.
மூலஸ்தானத்திற்கு வடபகுதியில் கட்டு மலை மேல் சௌந்தரேஸ்வரர் (சிவலிங்கம்) சந்நிதி உள்ளது. தனிக் கோபுரத்துடன் கூடய கோயில். ஏறுவதற்குப் படிகள் உள்ளன. அழகான கோபுரம் பலவகையானச் சிற்பங்களைக் கொண்டது. இக்கோபுர வாயிலில் மேல்பக்கச் சுவரின் தென்பகுதியில் மெய்கண்டார் கோயில் உள்ளது. நேர் எதிரில் கலிக்கம்ப நாயனார் காட்சி தருகிறார். இந்நாயனார் அவதரித்த தலமிது. மெய்கண்டாரின் தந்தையார் அச்சுத களப்பாளர் இப்பகுதியில் வாழந்தவராவார். இத்தலத்திற்கு அருகில் உள்ள சௌந்தர சோழபுரத்தில் வாழ்ந்த சௌந்தரவல்லி என்னும் தேவரடியார், பண்டம் மாற்ற இத்தலத்திற்கு வரும்போது, கடைவீதியிலிருந்தே வழிபடுவதற்கேற்ப இக்கோயில் கட்டப்பட்டதென்று ஒரு செய்தி சொல்லப்படுகிறது.
நால்வர் சந்நிதிகள், சேக்கிழார், தண்டபாணி உருவங்கள், கோடிவிநாயகர், சோமாஸ்கந்தர், விசுவேஸ்வரர், முருகன், மகாலட்சுமி சந்நிதிகளும் உள்ளன. கட்டுமலைக் கோயிலின் கீழ்ப்பகுதியில் பிரளயகாலேஸ்வரி அம்மை சிலையுள்ளது. தலமரத்தின்கீழ் சண்டேஸ்வரர் சந்நிதி. அம்மன் சந்நிதி, சுவாமிக்கு வடபகுதியில் உள்ளது. சண்டிகேஸ்வரி சந்நிதியுமுள்ளது. ஆலயத்தில் திருமண மண்டபம் கட்டப்பட்டுள்ளது.