July 26, 2016 தண்டோரா குழு
மணிப்பூர் மாநிலத்தில் கடந்த 16 ஆண்களாக உண்ணாவிரதப் போராட்டம் நடத்திவந்த இரோம் ஷர்மிளா போராட்டத்தைக் கைவிட்டு தேர்தலில் போட்டியிட முடிவெடுத்துள்ளார்.
இந்தியாவின் அங்கமான மணிப்பூர் மற்றும் நாகாலாந்து மக்கள் 1951ம் ஆண்டு தனி நாடு கேட்டு போராடினர். இதையடுத்து 1952ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலை புறக்கணித்ததோடு, அரசு சார்ந்த அமைப்புகளைப் புறக்கணித்தனர்.
மேலும் இதற்காகப் பல போராட்டங்களையும் நடத்தினர். அந்தப் போராட்டங்களை ஒடுக்க அரசு சுயாட்சி அதிகாரந்தளைக் கொடுத்தது. இதையடுத்து அங்குப் போராட்டக்காரர்களை ஒடுக்க
அஸ்ஸாம் ரைபிள்ஸ் என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது. ஆனாலும் நிலைமை சீரடையாததால் 1958ம் ஆண்டு அப்போதைய ஜனாதிபதி ராஜேந்திரபிரசாத் ஆயுதப்படை (சிறப்பு அதிகாரங்கள்) சட்டம், 1958 மூலம் அதிக அதிகாரங்களைக் கொடுத்தது.
இதில் யார் மீதும் சந்தேகம் இருந்தால் வாரன்ட் இல்லாமல் கைது செய்து விசாரணை செய்யலாம் எனவும், சந்தேகப்படும் நபர்களை உடனடியாக சுட்டுக் கொல்லலாம் என்பது உள்ளிட்ட அதிக அதிகாரங்கள் கொடுக்கப்பட்டன. இந்நிலையில் கடந்த 2000ம் ஆண்டு இம்பால் விமானநிலையம் அருகே பேருந்துக்குக் காத்திருந்த பொதுமக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தி அவர்களை அஸ்ஸாம் ரைபிள்ஸ் வீரர்கள் கொன்றனர். இதை எதிர்த்தும், ஆயுதப்படை (சிறப்பு அதிகாரங்கள்) சட்டத்தை திரும்பப் பெறவேண்டும் எனக் கோரியும் போராளி இரோம் ஷர்மிளா என்பவர் 2000ம் ஆண்டு நவம்பர் 2ம் தேதி உண்ணாவிரதம் இருந்தார்.
பின்னர் மூன்று நாட்கள் கழித்து நவம்பர் 5ம் தேதி அவரை அரசு கைது செய்தது. மீண்டும் அவர் உண்ணாவிரதத்தைத் தொடர்ந்ததால் அதே 2000ம் ஆண்டு நவம்பர் 21ம் தேதி மருத்துவமனையில் சேர்த்து மூக்கு துவாரம் வழியாக உணவைக் கொடுத்தனர். அவர் கைதியாக இருப்பதால் கடந்த 16 ஆண்டுகளாக அவரது உயிரைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு அரசுக்கு இருந்தது.
எனவே இதுவரை அவரை மருத்துவமனையில் வைத்து மூக்கு துவாரம் வழியாக உணவு கொடுத்து காப்பாற்றி வந்தனர். இந்த மன உறுதிக்காகவே இவர் இரும்புப் பெண் என மணிப்பூர்வாசிகளால் அழைக்கப்பட்டார். இவர் தற்போது இம்பால் நீதிமன்றத்திற்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசும்போது, வரும் உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டு அரசியலில் ஈடுபடப்போவதாகத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவரது உடனிருக்கும் போராளிகள் கூறும்போது, ஆகஸ்ட் 9ம் தேதியுடன் அவர் உண்ணாவிரதத்தை முடிப்பார் என எதிர்பார்ப்பதாகக் கூறியுள்ளனர். மேலும் அவர் சுயேட்சையாக போட்டியிட வாய்ப்புள்ளது எனவும் அவ்வாறு போட்டியிட்டால் அது அரசியலில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் எனவும் தெரிவித்துள்ளனர். 16 ஆண்டு கால போராட்டத்தை முடித்துக்கொண்டு அரசியல் பாதைக்கு திரும்பியிருக்கும் போராளிக்கு இந்தியா முழுவதும் இருந்து வாழ்த்துக்கள் குவிந்தவண்ணம் உள்ளது குறிப்பிடத்தக்கது.