March 24, 2018
தண்டோரா குழு
இந்திய அணியின் விக்கெட் கீப்பர் ரித்திமான் சாஹா 20 பந்துகளில் சதமடித்து அபூர்வ சாதனையைப் படைத்துள்ளார்.
கொல்கத்தாவில் மேற்குவங்க கிரிக்கெட் சங்கத்தின் சார்பாக ஜெ.சி.முகர்ஜீ டி20 கிரிக்கெட் உள்ளூர் போட்டித் தொடர் நடந்து வருகிறது. இதில் மோஹுன் பாகன் மற்றும் பி.என்.ஆர் ரீக்ரியேஷன் கிளப்புகளுக்கு இடையிலான போட்டி கலிகாட் மைதானத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. இப்போட்டியில் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் விரித்திமான் சாஹா 20 பந்துகளில் சதமடித்து சாதனையைப் படைத்துள்ளார்.
இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பி.என்.ஆர் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 151 ரன்கள் எடுத்தது. 152 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மோஹுன் பாகன் அணி 7 ஓவர்களிலேயே விக்கெட் இழப்பின்றி 152 ரன்கள் எடுத்து 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது.
கேப்டன் ஷுபமோய் தாஸ் 22 பந்துகளில் 43 ரன்கள் எடுத்தார். விரித்திமான் சாஹா அபாரமாக ஆடி 20 பந்துகளில் சதமடித்து சாதனையைப் படைத்தார். மொத்தம் 14 சிக்ஸர்களை விளாசியதுடன், 4 பவுண்டரிகளையும் விரட்டி வெறும் 20 பந்துகளிலேயே சதமடித்தார் சாஹா.
இதுமட்டுமின்றி ஒரு ஓவரில் 6 பந்துகளில் 6 சிக்ஸர்களை சாஹா விளாசினார். முதல் ரன்னை ஓடி எடுத்த சாஹா, சிக்ஸருடன் ஆட்டத்தை முடித்து 102 ரன்களுடன் களத்தில் நின்றார். 12 பந்துகளில் அரைசதம் கடந்தவர், அடுத்த 8 பந்துகளில் மீதமுள்ள 50 ரன்களை விளாசியுள்ளார் என்பது குறிபிடத்தக்கது.