March 26, 2018
தண்டோரா குழு
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் பதவியில் இருந்து ஸ்டீவ் ஸ்மித் நீக்கப்பட்டுள்ளார்.
தென்னாப்ரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வரும் ஆஸ்திரேலிய அணி, கேப்டவுனில் 3வது டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது. இப்போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டத்தின் போது, பந்தை சேதப்படுத்தியதாக ஆஸ்திரேலிய வீரர் ஃபேன் கிராஃப்ட் மீது புகார் எழுந்தது. இதுதொடர்பான வீடியோ பதிவுகளும் கிடைத்த நிலையில், தனது தவறை ஒப்புக் கொள்வதாக ஃபேன் கிராஃப்ட் தெரிவித்தார். பந்தை சேதப்படுத்திய புகாரில் சிக்கிய ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக கண்டனங்கள் குவிந்து வந்த நிலையில், அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து ஸ்டீவ் ஸ்மித்தும், துணை கேப்டன் பொறுப்பில் இருந்து டேவிட் வார்னரும் பதவி விலக ஒப்புக்கொண்டுள்ளனர்.
இதற்கிடையில், சூதாட்டப் புகாரில் சிக்கி தடைவிதிக்கப்பட்டு இரண்டு ஆண்டுகள் கழித்து இந்த ஆண்டில் நடக்கவிருக்கும் ஐபிஎல் தொடரில் மீண்டும் களமிறங்க இருக்கும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக ஸ்டீவ் ஸ்மித் உள்ளார்.
ஸ்டீவ் ஸ்மித் மீது எழுந்துள்ள நெருக்கடி காரணமாக ஸ்டீவ் ஸ்மித் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதில் இந்திய அணி வீரர் அஜின்கா ரஹானா ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டனாக நியமிக்கப்ட்டுள்ளார்.