July 27, 2016 தண்டோரா குழு
தனது தாயின் காதலை 32 ஆண்டுகளுக்குப் பிறகு நிறைவேற்றி, கேரளாவைச் சேர்ந்த பெண் ஒருவர் மகிழ்ச்சியடைந்துள்ளார்.
கேரள மாநிலம் கொல்லம் அருகே உள்ள ஒசிராவைச் சேர்ந்த அனிதா செம்புவிலயில். இவரது தந்தை ராணுவத்தில் உதவி பொறியாளராக பணியாற்றினார். அனிதா கடந்த 1984ம் ஆண்டு, 10ம் வகுப்பு படித்து கொண்டிருந்தார். அப்போது அங்கு டியூசன் ஆசிரியராக இருந்தவர் விக்ரமன். இவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் உறுப்பினர் ஆவார்.
கட்சி தொடர்பான கூட்டங்களில் அனிதாவும், விக்ரமனும் அடிக்கடி சந்தித்து கொண்டனர். அப்போது இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. ஆனால் அனிதாவின் தந்தை திருமணத்திற்கு சம்மதிக்க மறுத்துவிட்டார். மேலும் குடும்ப சூழலை எடுத்துக் கூறி, வேறொரு இடத்தில் அனிதாவை திருமணம் செய்து வைத்தார்.
இதனால் மனமுடைந்த விக்ரமன், அந்த ஊரை விட்டே சென்று விட்டார். திருமண வாழ்க்கையில் அனிதாவிற்கு ஆதிரா என்ற பெண் பிறந்தார். அவளின் 8வது வயதில், குடிக்கு அடிமையாகி அவரது தந்தை உயிரிழந்தார். பின்னர் ஆதிராவையும், அவரது சகோதரியையும் வளர்க்கும் பொறுப்பில் அனிதா தீவிரமாக இருந்தார். இந்நிலையில் சமீபத்தில் தனது தாயின் காதல் கதையை அறிந்த ஆதிரா, மிகவும் உணர்ச்சி வசப்பட்டுள்ளார். மேலும் முன்னாள் காதலரான விக்ரமன் திருமணமே செய்து கொள்ளாமல் இருந்ததையும் அறிந்து மிகவும் அதிர்ச்சியடைந்தார்.
இதற்கிடையில் விக்ரமன், அதே ஊருக்கு மீண்டும் திரும்ப வந்துள்ளார். அப்போது நடைபெற இருந்த பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிட்டுள்ளார். இதனிடையே ஆதிரா, விக்ரமனை சந்தித்து, நடந்ததைக் கூறியுள்ளார். தனது தாயின் துயரமிகு வாழ்க்கையை எடுத்துக் கூறி, விக்ரமனை மறுவாழ்வு அளிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.
தீவிர சிந்தனையை அடுத்து, ஆதிராவின் திருமணத்திற்கு பிறகே இது குறித்து யோசிக்க முடியும் என்று கூறியுள்ளார். தனது தாயின் மகிழ்ச்சியே பெரிது என்று எண்ணி, உடனடியாக திருமணம் செய்து கொண்டார் ஆதிரா. இதையடுத்து, தங்கள் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் உதவியுடன் அனிதாவின் திருமணத்திற்கு ஏற்பாடு செய்துள்ளனர்.
உறவினர்கள் ஒத்துழைப்புடன் கடந்த 21ம் தேதி, விக்ரமனும், அனிதாவும் திருமணம் செய்து கொண்டனர். இதன் மூலம் 32 ஆண்டுகளுக்குப் பிறகு, ஒரு காதல் ஜோடி மீண்டும் மணவாழ்க்கையில் சேர்ந்துள்ளது. தான் மிகுந்த மகிழ்ச்சியில் இருப்பதாகவும், தனது தாயின் மகிழ்ச்சிக்காக எதையும் செய்ய தயார் என்று ஆதிரா தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இதில் முக்கிய திருப்பம் என்னவென்றால், 32 ஆண்டுகளுக்கு முன் யார் இந்தத் திருமணத்தை தடுத்தாரோ அவரே திருமணத்தை முன்னின்று நடத்தினார் என்பது தான். ஆம் ஆதிராவின் தாத்தாவும், அனிதாவின் அப்பாவுமான ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரிதான் தலைமையேற்று திருமணத்தை நடத்தினார்.