March 31, 2018
தண்டோரா குழு
இனி ஆஸ்திரேலிய அணிக்காக விளையாடப் போவதில்லை என ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் வார்னர் கூறியுள்ளார்.
தென்னாப்ரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வரும் ஆஸ்திரேலிய அணி, கேப்டவுனில் 3வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 322 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. இப்போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டத்தின் போது, பந்தை சேதப்படுத்தியதாக ஆஸ்திரேலிய வீரர் ஃபேன் கிராஃப்ட் மீது புகார் எழுந்தது. இதுதொடர்பான வீடியோ பதிவுகளும் கிடைத்த நிலையில், தனது தவறை ஒப்புக் கொள்வதாக ஃபேன் கிராஃப்ட் தெரிவித்தார். பந்தை சேதப்படுத்திய புகாரில் சிக்கிய ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக கண்டனங்கள் குவிந்து வந்த நிலையில், அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து ஸ்டீவ் ஸ்மித்தும், துணை கேப்டன் பொறுப்பில் இருந்து டேவிட் வார்னரும் பதவி விலகினார்.
இந்த நிலையில் டேவிட் வார்னர் இன்று ஆஸ்திரேலியா திரும்பினார். அப்போது சிட்னியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், நாட்டு மக்களும், கிரிக்கெட் ரசிகர்களும் தன் மீது வைத்திருந்த நம்பிக்கைக்கு துரோகம் செய்து விட்டேன்.இதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்று கண்ணீர் சிந்தினார்.
மேலும்,தவறான முடிவை எடுத்து நாட்டை தரம் தாழ்த்தி விட்டேன் மீண்டும் மக்கள் நம்பிக்கையை பெறுவதற்கான வழியை தேடிக்கொண்டிருக்கிறேன்.இனி ஆஸ்திரேலிய அணிக்காக விளையாடப் போவதில்லை ஓய்வு குறித்து குடும்பத்தினருடன் ஆலோசித்து முடிவெடுக்க உள்ளேன் என்றார்.