April 9, 2018
தண்டோரா குழு
திட்டமிட்டபடி சென்னையில் நாளை ஐபிஎல் போட்டி நடைபெறும் என ஐபிஎல் தலைவர் ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் காலம் தாழ்த்தி வரும் மத்திய அரசுக்கு எதிராக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இதற்காக பல்வேறு அரசியல் கட்சிகள், விவசாயிகள், மாணவர்கள், இளைஞர்கள் தமிழகமெங்கும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையில், காவிரி பிரச்சினையில் மத்திய அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் சென்னையில் நாளை நடைபெறும் ஐ.பி.எல். போட்டியை ரத்து செய்ய வேண்டும் பல தரப்பில் இருந்து கோரிக்கைகள் எழுந்து வருகிறது. இதுமட்டுமின்றி ஐபிஎல் போட்டி நடைபெற்றால் வீரர்களை சிறை பிடிப்போம் என்று மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் தெரிவிக்கபட்டுள்ளது.
இதனால் சென்னையில் நாளை ஐபிஎல் போட்டி நடைபெறுமா என்ற கேள்வி எழுந்தது. இந்நிலையில் டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய ஐ.பி.எல். தலைவர் ராஜிவ் சுக்லா, சென்னையில் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகள் அனைத்தும் திட்டமிட்டபடி நடத்தப்படும். இதில் எந்த மாற்றமும் இல்லை. ஐபிஎல் போட்டிகளுக்கு தேவையான பாதுகாப்பை வழங்குவதாக தமிழக அரசு உறுதி அளித்துள்ளது. சென்னையில் ஐ.பி.எல். போட்டிகளை நடத்த உரிய பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். மேலும், காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பான அரசியல் சர்ச்சைகளுக்குள் ஐ.பி.எல். போட்டிகள் கொண்டுவரக்கூடாது என்றும் ராஜிவ் சுக்லா கூறியுள்ளார்.