July 29, 2016 தண்டோரா குழு
கான்பூர் IIT மாணவர்கள் கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடிக்க ஒரு புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளனர். புதிதாகக் கல்லூரியில் நுழைந்துள்ள பள்ளி மாணவர்களும், பட்டப்படிப்பு மாணவர்களும் 2,100 காகித விமானங்களைப் பறக்கச் செய்து சாதனைப் புரிந்துள்ளனர்.
பள்ளிக் காலத்தில் காகித அம்பு விட்டு பலரைக் கலாய்த்த மாணவர்கள் தற்போது சமூக விழிப்புணர்ச்சியை விமானம் மூலம் பரப்ப எத்தனித்துள்ளனர்.
1,050 மாணவர்கள் தங்கள் சாதனையை கின்னஸ் பதிப்பாளர்களிடம் நிரூபிக்க இந்நிகழ்ச்சியை ஆகாயத்திலிருந்தும், பூமியிலிருந்தும் புகைப்படங்கள் எடுத்து அனுப்பினர்.
இதற்கு முன்பு 2,000 காகித விமானங்களைப் பறக்கச் செய்து முன்னிலையில் இருந்த இண்டோர் கல்லூரியின் சாதனையை முறியடிக்க வேண்டுமென்ற நோக்கத்துடன், 1,050 மாணவர்கள் ஒருங்கிணைந்து 2,100 காகித விமானங்களைப் பறக்கச் செய்துள்ளனர் என்று IIT கான்பூர் பேராசிரியர் M.K.கொரை கூறினார்.
ஒவ்வொரு மாணவனும் இரு காகித விமானங்களைப் பறக்கச் செய்ய வேண்டும். அவை ஒவ்வொன்றிலும் மாணவர்களுக்குத் தேவையான சமூகக் கருத்துக்களை எழுதியிருக்க வேண்டும். காகித விமானம் தரையிறங்கியதும் மற்ற அனைவரும் அதிலுள்ள கருத்துக்களைப் பகிர்ந்து கொள்வர். அதன்படி நடப்பதாகவும் உறுதி மேற்கொள்வர்.
சில மாணவர்கள் கண்களை தானம் செய்ய விழைவதாகவும், சிலர் ரத்த தானம் செய்ய முன் வருவதாகவும், வேறு சிலர் ஏழை மாணவர்களுக்குக் கல்விதானம் செய்ய விரும்புவதாகவும் எழுதியுள்ளனர். இந்த சமூகக் கருத்துகள் பிற மாணவர்களுக்கு ஒரு முன்னோடியாக இருக்கும் என்றும் பேராசிரியர் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியை ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, யூனியன் பாங்க் ஆப் இந்தியா அதிகாரிகள் பார்வையிட்டனர். ஒவ்வொரு மாணவனின் முயற்சியும் தனித்தனியே பிறிதொரு மாணவனின் மேற்பார்வையின் கீழ் நடந்தபடியால் அனைத்துக் காகித விமானங்களும் தடையின்றிப் பறக்க ஏதுவாகின என்றும் தெரிவித்தார்.
முக்கியமாக இந்நிகழ்ச்சியின் நோக்கம் புதிய மாணவர்களுக்கு சீரிய கருத்துக்களைப் புகட்டவேண்டும், ஏனெனில் 4 வருடங்கள் தொடர்ந்து கற்கப்போகும் இவர்கள் பிற்காலத் தூண்கள் என்று பேராசியர் A.R. ஹரீஷ் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியைப் புகைப்படம் மூலம் காணும் அதிகாரிகள் கின்னஸ் புத்தகத்தில் பதிவு செய்ய ஆவன செய்வர் என்று பேராசிரியர் கொரை கூறினார்.