July 29, 2016 தண்டோரா குழு
முருகனின் அறுபடை வீடுகளில் ஐந்தாம் படை வீடாகச் சிறப்பு பெற்ற திருத்தணி சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஆடிக்கிருத்திகை விழா கொண்டாடப்பட்டது. விழாவை யொட்டி மூலக்கடவுளுக்கு அதிகாலை சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு வைர கிரீடம், முத்துக்கல் மரகதமாலை, தங்க ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டு தீபாராதனை நடைபெற்றது.
மேலும் உற்சவருக்கு மலர்களால் அலங்கரிக்கப்பட்டுச் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. தமிழகம், ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திருத்தணியில் குவிந்தனர்.
பலர் மொட்டை அடித்துக் கொண்டு சரவணப்பொய்கை திருக்குளத்தில் நீராடி படிகள் மற்றும் மலைப்பாதை வழியாகக் காவடிகளுடன் மலைக் கோயில் சென்றடைந்து முருகனின் அருள் பாடல்கள் பாடியவாறு பலமணி நேரம் பொது வரிசையில் காத்திருந்து முருகப்பெருமானை வழிபட்டு காவடிகள் செலுத்தினர்.
ஆடிக்கிருத்திகை விழா தொடர்ந்து மாலை சரவண பொய்கை திருக்குளத்தில் தெப்பல் உற்சவம் விழா நடத்தப்பட்டது. அதில் வள்ளி தெய்வானையுடன் முருகப்பெருமான் மும்முறை வலம் வந்து அருள் பாலித்தார்.