April 20, 2018
tamilsamayam.com
11வது ஐபில் தொடரில்,மொஹாலியில் நடைபெற்ற 16வது லீக் போட்டியில் பஞ்சாப் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதாபாத் அணியும் மோதின.இதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
இதைத் தொடர்ந்து,பஞ்சாப் அணியில் கிரிஸ் கெயில் மற்றும் கேஎல் ராகுல் தொடக்க வீரர்களாக களமிறங்கினர்.சென்ற ஆட்டத்தில் சென்னை அணிக்கு எதிராக சிறப்பாக விளையாடிய கெயில், இந்த ஆட்டத்திலும் தனது அதிரடி ஆட்டத்தைத் தொடர்ந்தார்.சிறப்பான தொடக்கம் கொடுத்த கேஎல் ராகுல் மற்றும் அவரைத் தொடர்ந்து வந்த அகர்வால் இருவரும் தலா 18 ரன்களில் அவுட்டாகி வெளியேறினர்.
பின்னர்,கெயிலுடன் ஜோடி சேர்ந்த கருண் நாயர், கெயிலுக்கு ஆதரவாக நிலைத்து நின்றார். ஒருபுறம் விக்கெட் எடுக்க திணறிய சன்ரைசர்ஸ் பந்துவீச்சாளர்களுக்கு,மற்றொரு இடியாக கெயில் நாலாபுறமும் பந்துகளை சிக்ஸர்களுக்கு பறக்க விட்டார்.சிறப்பாக விளையாடிய கெயில்,கடைசி வரை அவுட்டாகாமல் 63 பந்துகளில் 11 சிக்ஸ்,1 பவுண்டரியுடன் 103 ரன்கள் சேர்த்து ஐபிஎல் போட்டியில் தனது 6 வது சதத்தைப் பதிவு செய்தார்.
இறுதியாக, 20 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணி 3 விக்கெட்கள் இழப்பிற்கு 193 ரன்கள் குவித்தது.194 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் சன்ரைசர்ஸ் அணி பேட் செய்தது.இறுதியில் ஐதராபாத் அணி 20 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 178 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது.