April 28, 2018
tamilsamayam.com
ஐபிஎல் கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் டெல்லி அபார வெற்றியை பதிவு செய்தது. இந்த போட்டியில் ஏன் கம்பீர் விளையாடவில்லை என கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர் விளக்கியுள்ளார்.
ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கோலாகலமாக நடைப்பெற்று வருகின்றது. நேற்று நடந்த 26வது லீக் போட்டியில் டெல்லி – கொல்கத்தா அணிகள் மோதின.
இதில் டெல்லியின் ஸ்ரேயஸ் ஐயரின் அதிரடி 93*, பிரித்வி ஷா 62, கோலின் முன்ரோ 33, மேக்ஸ்வெல் 27 ரன்கள் கை கொடுக்க 20 ஓவரில் 219 ரன்கள் குவித்தது. தொடர்ந்து விளையாடிய கொல்கத்தா அணி 164 ரன்கள் மட்டும் எடுக்க முடிந்தது. 55 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அபார வெற்றியை பதிவு செய்தது.
டெல்லி அணி தொடர் தோல்விகளால் தன் கேப்டன் பொறுப்பை துறப்பதாக கம்பீர் தெரிவித்ததை தொடர்ந்து ஸ்ரேயஸ் ஐயர் புதிய கேப்டனாக களமிறங்கினார். இதைத் தொடர்ந்து அதிர்ச்சி அளிக்கும் விதமாக கேப்டன் பொறுப்பிலிருந்து விலகிய கம்பீர், இந்த போட்டியிலும் இடம்பெறவில்லை.
இதுகுறித்து விளக்கமளித்த ஸ்ரேயஸ் ஐயர், “கம்பீர் போட்டியில் விளையாடாததற்கு நான் காரணமில்லை. தொடர் தோல்விக்கு பொறுப்பேற்று கேப்டன் பொறுப்பிலிருந்து விலகியது அவரின் உயரிய மனதை காட்டுகிறது. அதே சமயம் தான் இந்த போட்டியிலிருந்து விளையாடாமல் வெளியே உட்கார்ந்தது அவரின் தைரியத்தை காட்டுகிறது. இது அவரின் சொந்த முடிவு, யாரும் அவரை கட்டாயப்படுத்தவில்லை. அவர் மீண்டு வந்து போட்டியில் பங்கேற்பார்.” என தெரிவித்தார்.