August 2, 2016 தண்டோரா குழு
கௌரவக் கொலை என்னும் பேரில் தங்கள் சொந்தங்களை ஈவு இரக்கம் இன்றி கொலை செய்வது சர்வ சாதாரணமாக நடந்தது கொண்டு வருகிறது. இதற்குப் பல உதாரணங்களைச் சொல்ல முடியும். இதைத் தடுக்க இதுவரை எந்த ஒரு சட்டமும் ஏற்படுத்தவில்லை என்பது பரிதாபமான விஷயம் என்று தான் சொல்லவேண்டும்.
சமீபத்தில் பாகிஸ்தான் தேசத்தில் மாடல் அழகி ஒருவர் தன்னுடைய சொந்த சகோதரனால் கொலை செய்யப்பட்ட சம்பவம் அடங்குவதற்குள் அதே போன்ற மற்றொரு சம்பவம் அங்கு அரங்கேறி உள்ளது. இப்படித் தொடர்ந்து கௌரவக் கொலைகள் நடப்பதால் அங்குள்ள மக்களுக்கு பெரும் பயம் ஏற்பட்டுள்ளது.
பாகிஸ்தானைச் சேர்ந்த அழகு சிகிச்சை நிபுணரை, அவரது தந்தை மற்றும் அப்பெண்ணின் கணவர் ஆகிய இருவரும் சேர்ந்து கௌரவக் கொலை செய்ததை அடுத்து அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சாமியா சாஹித்(28) பாகிஸ்தான் தேசத்தை பூர்வீகமாகக் கொண்ட அவர் இங்கிலாந்தின் பிராட்போர்ட் என்னும் இடத்தில் அழகுக் கலை நிபுணராகப் பணிபுரிந்து வந்தார். அவர் தனது உறவினரான மொஹமது ஷக்கீல் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார் ஆனால் கருத்து வேறுபாடு காரணமாக தனது கணவரை விவாகரத்து செய்து உள்ளார்.
இதனை அடுத்துக் கடந்த 2014ம் ஆண்டு காஸம் (30) என்பவரை இரண்டாவது திருமணம் செய்த கொண்டு இங்கிலாந்துக்குக் குடிபெயர்ந்தார்.
இந்நிலையில், கடந்த புதன்கிழமை பாகிஸ்தானில் வசித்து வரும் தனது தந்தைக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால், அவரைப் பார்ப்பதற்காக அங்குச் சென்றுள்ளார். ஆனால் விதி வேறுவகையில் அவருடைய வாழ்க்கையில் விளையாடி உள்ளது. திடீரென்று சாமியா மாரடைப்பால் உயிரிழந்துவிட்டதாக அவரது இரண்டாவது கணவருக்கு சாமியாவின் பெற்றோர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். பின்னர் அவளது உடலையும் அடக்கம் செய்துள்ளனர்.
ஆனால், காஸம் தனது மனைவி இயற்கையாக மரணம் அடையவில்லை என்றும், சாமியாவை அவரது குடும்பத்தினரே கௌரவக்கொலை செய்துள்ளனர் என்று காவல் துறையினரிடம் புகார் அளித்துள்ளார்.
மேலும், சாமியாவின் இறப்பைக் குறித்து காஸம் பேசுகையில், எங்களது திருமணத்தை அவளுடைய பெற்றோரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்றும் எப்படியாவது அவர்களது மகளை என்னைவிட்டுப் பிரிந்து, தங்களிடம் வந்துவிடுவாள் என்ற எதிர்பார்ப்பில் இருந்தனர். ஆனால் அது நடக்கவில்லை. இதனால் கோபம் கொண்ட அவர்கள் அவளைக் கௌரவ கொலை செய்துள்ளனர் என்று கூறியுள்ளார்.
இதனால், மீண்டும் சாமியாவின் உடலைப் பிரேத பரிசோதனை செய்த போது, அவரது கழுத்தில் 7.2 இன்ச் அளவுக்குக் காயம் இருந்துள்ளது. அது மட்டுமின்றி அவரது வாய் மற்றும் மூக்கில் இருந்து ரத்தம் கசிந்துள்ளது என்பது தெரிய வந்துள்ளது.
மேலும், இந்த விசாரணையின் போது, சாமியாவின் உடற்கூறு பரிசோதனையில் அவர் தாக்கப்பட்டதற்கான ஆதாரம் தெளிவாக தெரிய வந்ததையடுத்து, சாமியாவின் தந்தை மற்றும் அவரது முதல் கணவரை காவல் துறையினர் கைது செய்து காவலில் வைத்துள்ளனர்