May 14, 2018 தண்டோரா குழு
தமிழ் ராக்கர்ஸ்க்கும் தங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என லைகா நிறுவனம் விளக்களித்துள்ளது.
திரைபடங்கள் வெளியான அடுத்த நாளே இணையதளத்தில் வெளியாவது தற்போது வாடிக்கையாகிவிட்டது.இதற்கிடையில்,தயரிப்பாளர்கள் சங்க தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதிகளை நடிகர் விஷால் நிறைவேற்றவில்லை என்பதால் அவர் பதவி விலக வேண்டும் என நடிகர் ராதாரவி,டி.ஆர்,இயக்குநர் பாரதிராஜா ஆகியோர் நேற்று ஒருமித்த கருத்துடன் செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்தனர்.
அப்போது பேசிய அவர்கள்,தமிழ் திரைப்பட சங்கத்தில் தமிழர்களே நிர்வாகிகளாக இருக்க வேண்டும் என்றும்,தயாரிப்பாளர்கள் சங்கத்தில் யாரும் தலையிடக் கூடாது என்றும் கூறினர்.மேலும்,லைகா நிறுவனத்தின் உதவியுடன் தமிழ் ராக்கர்ஸ் உள்ளிட்ட பைரசி இணையதளங்களுடன் விஷால் கூட்டு வைத்துக் கொண்டு செயல்படுவதாகவும் குற்றம்சாட்டினர்.இவ்விவகாரம் தமிழ் திரையுலகில் சர்ச்சையை ஏற்படுத்தியது.இதையடுத்து,தற்போது லைகா நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
இது தொடர்பாக லைகா நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
லைகா நிறுவனம் இந்தியாவின் முன்னணி திரைபடத் தயாரிப்பு நிறுவனமாகும்.லைகா மூவிஸ் டாட் காம்,லைகா மூவி டாட் காம் ஆகிய இரண்டுமே 2014 ஜூன் மாதத்துடன் மூடப்பட்டன.இந்த இரு இணையதளங்களுடன் லைகா நிறுவனத்துக்கு எந்த தொடர்பும் கிடையாது.லைகா மூவி டாட் காம் இணையதளத்தை அதற்கு முன்பு ஆரம்பித்த தமிழ் தமிழன் என்கிற பெயர் கொண்டவர் புதுப்பிக்கவில்லை எனவே லைகா நிறுவனம் லைகா மூவி டாட் காம் என்கிற இணையதளத்தின் பெயரை ஜூலை 2017ம் ஆண்டு கையகப்படுத்தியது.
ஆனால், லைகா மூவிஸ் டாட் காம் இணையதளத்தை புதுப்பித்துக்கொண்டதால் எங்களால் அதை பெற முடியவில்லை,இப்போது லைகா டாட் காம் லைகா புரொடக்க்ஷன்ஸ் டாட் இன் னாக மாற்றபட்டுள்ளது.
ஜூலை 5,2017 க்கு முந்தைய லைகா மூவி டாட் காம் தொடர்புடைய செயல்களுக்கு லைகா நிறுவனம் பொறுப்பேற்காது.அதே தேதிக்கு பின் லைகா மூவி டாட் காம் எவ்வித ஆன்லைன் பைரசி செயல்களிலும் ஈடுபடவில்லை.எனவே எங்கள் மீதான குற்றசாட்டுகள் அடிப்படை ஆதாரமற்றவை.
எவ்வித ஆன்லைன் பைரசியை தடுக்கும் செயல்களை நாங்கள் ஆதரிக்கிறோம்.எங்கள் படங்கள் மற்றும் இதர படங்கள் தொடர்புடைய ஆன்லைன் பைரசிக்கு எதிராக செயலாற்றுகிறோம். இது தொடர்பாக எங்கள் மீது ஆதாரம் இருந்தால் அது குறித்து விளக்கமளிக்க தயாராக உள்ளோம்.
மேலும்,எங்களிடம் விளக்கம் கேட்காமல் கட்டுரை வெளியிட்டுள்ளது வருத்தமளிக்கிறது.லைகா நிறுவனத்திற்கு எதிராக பேசிய ஊடக நிறுவனங்கள்,நபர்கள் மீது ஆகியோருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க முடிவெடுத்துள்ளோம்.இது போன்ற உண்மைக்கு புறம்பான குற்றச்சாட்டுக்களை நம்ப வேண்டாம் என்று என லைகா நிறுவனம் அறிக்கையில் கேட்டுக் கொண்டுள்ளது.