May 21, 2018 தண்டோரா குழு
விவேக் – தேவயாணி நடிப்பில் உருவாகி இருக்கும் `எழுமின்’ படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் இன்று நடந்தது. இவ்விழாவில் நடிகர்கள் சிம்பு, விஷால், கார்த்தி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு பேசினர்.
அப்போது பேசிய நடிகர் சிம்பு,
நான் பொதுவாகவே டிரைலர், ஆடியோ வெளியீடு போன்ற விழாக்களில் கலந்து கொள்வதில்லை. ஏனெனில், அதற்கு மைக் தான். மைக் கையில் கிடைத்தால் நான் ஏதாவது பேசிவிடுவேன். அது ஏதாவது பிரச்சனையை கிளப்பும். வாழ்க்கையில் ஒருவரை பிடிக்கும் என்று சொல்வதை விட, அவர்களை நாம் பின்பற்றுகிறோம் என்பதை நடைமுறையில் செய்து காட்ட வேண்டும். அப்படி செய்து காட்டுபவர் தான் விவேக். நான் எனது படம் ஒன்றில் ஒரு காமெடியனை அறிமுகம் செய்ய முயற்சி செய்தேன். ஆனால் அந்த படத்தின் தயாரிப்பாளர் விவேக் சார் தான் உச்சத்தில் இருக்கிறார், அவரை ஒப்பந்தம் செய்ய வேண்டும் என்றார். அந்த நிலையில், விவேக் விட்டுக் கொடுத்ததால் தான், சந்தானம் இன்று சினிமாவில் இருக்கிறார்.
போட்டி, பொறாமை எதற்கு, எதை எடுத்துக் கொண்டு போகிறோம். மனதில் பட்டதை தான், நான் பேசுவேன். விஷால் நடிகர் சங்கத் தேர்தலில் நிற்கும் போது, அவரது பேச்சில், முடிவில் எனக்கு உடன்பாடு இல்லை. அவர் மீது கோபப்பட்டு, திட்டியிருக்கிறேன். அவர் செய்த ஒரு விஷயம் நமக்கு பிடிக்கவில்லை என்றால் அவர் செய்யும் அனைத்துமே தவறா, நடிகர் சங்கம் கட்டிட அடிக்கல் நாட்டு விழாவிற்கு மனிதாபிமானத்துடன் என்னை அழைத்த விஷாலுக்கு நன்றி. நான் திட்டுகிறேன் என்றால் பலரும் சும்மா திட்டுகிறார்கள்.
எனக்கு பிடித்ததை நான் மகிழ்ச்சியாக செய்கிறேன். ஆனால் தற்போது ஒரு விஷயத்தில் நான் உத்தரவாதம் அளிக்கிறேன். எனக்கு பிடித்த மாதிரி நான் இருந்து கொள்கிறேன். ஆனால் நான் தாமதமாக வருவது பலருக்கு கஷ்டமாக இருப்பதாக சொல்கின்றனர். அப்படி இருந்தால், இனி நான் தாமதமாக வர மாட்டேன். லேட்டாகவும் போவதில்லை என்று உறுதி அளிக்கிறேன் என்றார்.