August 4, 2016 தண்டோரா குழு
கடந்த மாதம் அசாமில் பெய்த கனமழை காரணமாக அங்குள்ள ஆறுகளில் பெருவெள்ளம் ஏற்பட்டது. இதில் அஸ்ஸாம் மாநிலம் ரௌமரி என்ற இடத்தில் உள்ள வனப்பகுதியில் இருந்த ஒரு யானை வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டு அண்டை நாடான பங்களாதேஷில் உள்ள கஜிபூர் மாவட்டத்தில் அடைக்கலம் புகுந்தது.
இந்த இடத்தை அடைய அந்த யானை குரிக்ரம், கைபந்த, ஜமால்பூர், போக்ரா மற்றும் சிரஜ்கஞ்ச் ஆகிய ஐந்து மாவட்டங்களைக் கடந்து வந்துள்ளது. தற்போது பங்களாதேஷின் கஜிபூர் மாவட்டத்தில் உள்ள ஆற்றங்கரையோரம் சுற்றித்திரியும் இந்த யானை அங்குள்ள மக்களை அச்சுறுத்துவதால் அந்நாட்டு வனத்துறையினர் அஸ்ஸாம் மாநில வனத்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து அந்த யானையை அங்கிருந்து மீட்டுக் கொண்டுவர இந்தியா சார்பில் ஒரு குழு அமைக்கப்பட்டது. அதில், ஓய்வுபெற்ற வனத்துறை அதிகாரி ரிதேஷ் பாட்டச்சர்ஜி, கோல்பர வனத்துறை அதிகாரி சௌதுரி சாலமன் உதின் மற்றும் கால்நடை மருத்துவ பேராசிரியர் ஸ்வரமா ஹுஷால் கொனோவர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
இவர்கள் நேற்று பங்களாதேஷ் சென்று யானை முகாமிட்ட இடத்தைப் பார்வையிட்டுள்ளனர். இன்று அந்த யானையைப் பிடிக்கும் முயற்சியை மேற்கொண்டுள்ளனர். ஆனாலும் அப்பகுதி மக்கள் கூட்டம் கூட்டமாக வருவதால் யானையை நெருங்க முடிவதில்லை எனத் தெரிவித்த குழுவினர் இன்று இரவு அல்லது நாளைக்குள் பிடித்து இந்தியா கொண்டுவரப்படும் எனத் தெரிவித்துள்ளன.