• Download mobile app
24 Nov 2024, SundayEdition - 3210
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

காலாவில் முழு எனர்ஜியுடன் ரஜினி – காலா படம் வெற்றியா ?

June 11, 2018 மனோகரன் வழக்கறிஞர்

காணி நிலம் வேண்டும் – பராசக்தி
காணி நிலம் வேண்டும்… என்றார் பாரதியார்.

தனக்கென்று ஒரு நிலம் என்பது ஒவ்வொரு மனிதனின் விருப்பம், கனவு. இருப்பிடம் என்பது மனிதனின் உரிமை. மனிதன் தோன்றுவதற்கு முன்பே இருந்த நிலத்தை மனிதன் தோன்றியவுடன் தன் தேவைகளுக்காக உபயோகிக்க ஆரம்பித்தான். பின் மனிதர்கள் பல்கி பெருகியவுடன் இது என் நிலம், இது உன் நிலம் என்றானது. நிலம் நாடுகளாக பிரிக்கப்பட்டது. நிலத்தை பிடிக்க போர்கள் நடந்தது. நடக்கிறது. இன்று உலகநாடுகள் ஆயுதபலத்தை அதிகரிப்பதும் இன்னொரு நாட்டை ஆக்கிரமிப்பதும் நிலம் சார்ந்தே இருக்கிறது. இனப்படுகொலைகள் நிலம் சார்ந்தே நடத்தப்படுகிறது . நிலம் என்பது, தேவை என்பதையும் கடந்து மனிதனின் பேராசையால் தன் பலம்,அதிகாரம், அந்தஸ்து என தன்னை பறைசாற்றும் பொருளானது.நிலம் மிகப்பெரிய வியாபாரம் ஆனது. தற்போதைய சூழ்நிலையில் மக்கள் பெரு நகரங்களையும், நகரங்களையும் நோக்கி படை எடுக்கின்றனர். நகரங்கள் இடம் இல்லாமல் பிதுங்குகின்றன. நிலப் பற்றாக்குறையால் அடுக்குமாடிகள் உருவாகி பல்கி பெருகுகிறது. அதிகாரத்தை கையில் வைத்திருக்கும் அரசியல்வாதிகள் பொது நிலத்தையும் விட்டு வைக்காமல் வியாபாரமாக்குகின்றனர்.

காலம் காலமாக பல ஏக்கரில், தங்கள் நிலங்களில் வாழும் Slum Dwellers எனப்படும் குடிசைவாழ் மக்களை, கான்க்ரிட் வீடுகள் என்ற ஆசைகாட்டி அடுக்குமாடிகள் என்னும் 6 சுவற்றுக்குள் இருக்கும் வெற்றிடத்தில் வைக்கின்றனர்.ஆசைகள் துரத்த தங்கள் நிலத்தை விட்டு வெற்றிடத்துக்கு குடியேறுகின்றனர் மக்கள்.எல்லாவற்றையும் வியாபாரத்துக்குள் கொண்டுவந்துவிட்டவனுக்கு, பெருநகரங்கள் நடுவே பெரிய அளவில் இருக்கும் சேரிகள் கண்ணை உறுத்துகிறது. ஊரை விட்டு வெகுதூரத்தில் இருக்கும் நிலத்தையே ” மெயின் ரோட்டுக்கு பக்கத்தில் ” என விற்பவன் மும்பை நடுவே 40000 கோடி மதிப்பு பெரும் தாராவியை விடுவானா ?

அரசியல் தலைவன் ஹரிதேவ் தாராவியை வளைத்து போட பல வழிகளில் முயல்கிறான். ஆனால் அங்கு தாராவிக்கு அரனாக இருக்கும் காலா என்கிற கரிகாலனை மீறி எதுவும் செய்யமுடியவில்லை. தூய்மை மும்பை என்கிற பெயரில் அடுக்குமாடி வீடுகள் கட்டி அம்மக்களை அங்கிருந்து வெளியேற்ற என்.ஜி.ஓ மூலமாகவும் முயற்சி நடக்கிறது. ஆனாலும் முடியவில்லை. அழுக்கு, கருப்பு எல்லாம் மற்றவர்களுக்கு தூய்மையற்றவை,ஆனால் அம்மக்களுக்கு அது வாழ்க்கை. எவ்வளவோ குறைகள் இருந்தாலும் தங்கள் நிலம் தங்கள் உரிமை, அதை விட்டுத்தர அவர்கள் தயார் இல்லை. சூழ்ச்சிகள் பலிக்காதபோது அதிகார பலம் உபயோகிக்கப்படுகிறது. தன்னை ராமணாக நினைத்துக்கொள்ளும் ஹரிதாதா காலாவை ராவணனாக சித்தரிக்கிறான்.ராவண வதம் நடத்தப்படுகிறது. ராமாயணத்தில் ராமன் ராவணனின் தலையை வெட்டினால் ,விழுந்த இடத்தில் மீண்டும் ஒரு தலை முளைக்கிறது. காலா என்னை வீழ்த்தினால், இன்னும் பல காலாக்கள் முளைப்பார்கள் என்கிறான். கடைசியில் ராவணன் தலை துண்டிக்கப்பட்டதா ? துண்டிக்கப்பட்ட தலை மறுபடியும் பல தலைகளாக முளைத்து வந்ததா என்பதுதான் “காலா”.

நில அரசியல் பேசும் படங்களில் காலா ஒரு மிக முக்கியமான பதிவு. காலாவில் மக்களின் அடிப்படை உரிமையான நிலத்தை பற்றியும் அதன் அரசியல் பற்றியும் மிக நுணுக்கமாக, எந்தவித Exaggerationம் இல்லாமல் சொல்லியிருக்கிறார் ரஞ்சித்.ரஞ்சித் படங்களில் எப்போதுமே கதை எங்கு நடக்கிறதோ அந்த இடத்து மக்களின் வாழ்வியல் அப்படியே சொல்லப்பட்டிருக்கும். அட்டகத்தியில் சென்னை புறநகர். மெட்ராஸ் படத்தில் வடசென்னை, கபாலியில் மலேசியா என அந்த வாழ்வியல் அப்படியே நம் கண் முன்னே எந்த விதமான பூச்சுகளும் இல்லாமல் சொல்லப்பட்டிருக்கும். அதேபோல் காலாவில் மும்பையின் தாராவி. படம் முடியும் போது தாராவிக்குள் பயணித்த உணர்வுதான் வருகிறது. தாராவி மக்கள் வேலை புறக்கணிப்பு நடத்தினால் மும்பை எந்த அளவுக்கு ஸ்தம்பிக்கும் என்பதும், தாராவி மக்கள் என்றாலே கிரிமினல்கள் என்கிற பார்வையே பெரும்பாலும் மும்பையில் இருக்கிறது என்பதும் நம் மனதில் பதியவைக்கப்படுகிறது. காலா, செல்வி, சரினா, புயல், ஹரிதாதா என ஒவ்வொரு கேரக்டரிலும் ஒரு Uniqueness தெரிகிறது.

கபாலி கேரக்டர் மனைவியை தொலைத்த ஒரு Depressed Mentality உள்ள கேரக்டர் என்பதால் ரஜினியின் எனர்ஜி அதில் இல்லை. ஆனால் காலாவில் முழு எனர்ஜியுடன் ரஜினி. கபாலியை போலவே காலாவிலும் ரஜினி தெரியவில்லை, காலாதான் தெரிகிறார். குறிப்பாக ரஜினி, ஹூமா குரோஷி காட்சிகள் படத்தின் பெரிய ஹைலைட். ரஜினியின் நுண்ணிய முகமாறுதல்கள், உடல்மொழிகள் ரஜினி எப்பேர்ப்பட்ட நடிகர் என்பதை இந்த தலைமுறைக்கு காட்டியிருக்கிறது. ஒரு காட்சியில் தன் மனைவி, முன்னாள் காதலி, அவள் மகள் மூவரும் அமர்ந்திருக்க. மனைவியை கடந்து, காதலியை பார்த்துக் கொண்டு அவள் மகளின் தலையை தடவி செல்லும் காட்சியில் அவ்வளவு ஒரு Mixed and Minute expressions. இந்த இடத்தில் ரஞ்சித் போட்ட பந்தை சிக்சருக்கு தூக்கியிருக்கிறார் ரஜினிகாந்த். ஹரிதேவ் வீட்டில் இந்தியில் திமிராக பேசும் இடத்திலும், மழை பெய்ய, சம்பத்தை கொல்ல நடந்து வரும் இடத்திலும், காவல் நிலையத்தில் போதையில் நக்கல், நையாண்டி, கோபம், ஆவேசம் என அனைத்தையும் சர்வசாதரணமாக வெளிபடுத்தும் இடத்திலும், கிளைமேக்ஸ் காட்சியிலும் தெறி மாஸ் காட்டியிருக்கிறார் ரஜினி. இந்த அளவு வெயிட்டான கிளைமேக்சை ரஜினியை தவிர யார் செய்திருந்தாலும் எடுபட்டிருக்காது. ஒரு நடிகராக Rajini in full form.

ஹரிதேவ் நானா படேகர். இவர் நடிப்பை உணர நமக்கு இரண்டு, மூன்று முறை படம் பார்க்கவேண்டும். இதுவரை நாம் பார்த்த ரஜினி பட வில்லன்கள் எவர் போலவும் இவர் இல்லை. என்னை பொறுத்தவரை ரஜினி படங்களின் நெ.1 வில்லன் ஹரிதாதாதான். பக்கம் பக்கமாக வசனத்தில் சொல்லப்படவேண்டியதை வெறும் ஒரு சின்ன பார்வையில் வெளிபடுத்துகிறார் நானா.காரில் இருந்து இறங்கி நடக்கும்போது, தன் சட்டையை உதறிக்கொள்வதும், சுற்றி இருப்பவர்களை தலையை திருப்பி பார்ப்பதும், அவர் உடல்மொழியே அவர் என்ன மனநிலையில் இருக்கிறார் என்பதை அட்டகாசமாக வெளிபடுத்துகிறது.. அவர் வீட்டில் இருக்கும்போது,காலா வருகிறார் என்று சொல்லப்படும் இடத்தில் நான்கைந்து விதமாக பார்வையை திருப்புவார். இந்த இடத்தில் சில நிமிட வசனங்கள் தேவைப்படும், ஆனால் வெறும் 5 வினாடிகளில் வசனத்தின் தேவையே இல்லாமல் செய்துவிட்டார் நானா படேகர். தான் வரும் காட்சிகளில் மொத்த சூழ்நிலையையும் தன் சில நொடி நடிப்பில் காட்டிவிடுகிறார். தமிழ் சினிமா வில்லன்களில் நிச்சயமாக நான படேகர் ஒரு Benchmark.

காலாவின் மனைவியாக ஈஸ்வரி ராவ். ரஜினி படங்களின் நாயகிகளில் நிச்சயமாக One of the Very best இவர்தான். அந்த குடும்பத்தை அவர்தான் கட்டி ஆள்கிறார் என்பது முதல் சீனிலேயே தெரியப்படுத்திவிடுகிறார். ஹூமாவும் ரஜினியும் வரும் இடங்களில் ஈஸ்வரிராவின் முக மொழியும், சிந்தனை வெளிபடும் உடல்மொழியும் சான்சே இல்லை. இந்தவருடத்தின் சிறந்த நடிகை விருது பட்டியலில் கண்டிப்பாக ஈஸ்வரி ராவின் பெயர் இருக்கும். ரஜினியின் முன்னாள் காதலியாக வரும் ஹூமா குரோஷி தன் கேரக்டர் தன்மையை உணர்ந்து அடக்கிவாசித்திருக்கிறர். A Confident Single Mother Character has been well portrayed. அஞ்சலி பட்டில் தனக்கு கிடைத்த சின்ன கேரக்டரில் மிக ஆழமாக தன் இருப்பை உணர்த்தியிருக்கிறார். அவர் வரும் அனைத்து காட்சிகளிலும் ஒரு Strong Impact இருக்கிறது. மற்றபடி சமுத்திரக்கனியும் ஓகே.

காலா ஒரு மக்கள் பிரச்சனையை பேசும் படம் என்பதால், ஒவர் ஹீரோயிச பிண்ணனி இசையை தவிர்த்து காட்சிகளின் தன்மையை வெளிபடுத்தும் இசையை தந்திருக்கிறார் சந்தோஷ் நாராயணன். கிளைமேக்சில் இசை பெரிய பங்கு வகிக்கிறது. கூடவே பாடல் வரிகளும். உமாதேவியின் வரிகளில் கண்ணம்மா பாடல் இந்த வருடத்தின் சிறந்த பாடலாக இருக்கும். பாடலுக்கு தேசிய விருது கிடைத்தாலும் ஆச்சரியமில்லை. ” நீரின்றி மீனும், சேருண்டு வாழும் ..வாழ்விங்கு வாழ்வாகுமோ” வரிகள், தான் விரும்பியவனுடன் வாழாமல் கிடைக்கின்ற வாழ்வை வாழும் ஒரு வாழ்க்கை எல்லாம் வாழ்க்கையா என்கிற சரினாவின் மொத்த மனநிலையையும் உணர்த்திவிடுகிறது. அதேபோல் ” ஊட்டாத தாயின், கணக்கின்ற பால்போல் என் காதல் கிடக்கின்றதே ” என்ற வரிகள் காலாவின் அடக்கிவைக்கப்படிருக்கும் வெளிபடுத்தமுடியாத காதலை மிக அழகாக உணர்த்துகிறது. Sheer Class.

காலா ரஜினி நடித்திருக்கும் ரஞ்சித் படம் என்றுதான் சொல்லவேண்டும். கடைசி 30 நிமிடங்கள் வரை ரஜினிகாந்த் என்னும் நடிகரை அடித்தாட விட்ட ரஞ்சித் கடைசி 30 நிமிடங்களை தன் வசமாக்குகிறார். அதுவும் அந்த ராவண வதமும், கிளைமேக்ஸ் காட்சிகளும் Stunning. கிளைமேக்ஸ் காட்சியில் சீறிப்பாயும் கருப்பு, சிவப்பு, நீல வண்ணங்கள் மூலம் மக்கள் புரட்சியையும் அதன் வெற்றியையும் வெளிபடுத்தும் Symbolism காட்சிகள் இதுவரை தமிழ் சினிமா பார்த்திராத ஒன்று. Top Angle shotகள் மூலம் வண்ணப் புரட்சியையும், காலாவின் பிம்பங்கள் ஹரியை மிரட்டுவதையும் மிரட்டலாக படம் பிடித்துள்ளார் காமிராமேன் முரளி.

காலா மூலம் மிக முக்கியமான நில அரசியலை விவாதப் பொருளாக்கியிருக்கிறார் ரஞ்சித். படத்தின் பல இடங்களில் வலதுசாரி எதிர்ப்பு காட்சிகளும், மறைமுக குறியீடுகளும் நிரம்பியிருக்கின்றன. தூய்மை இந்தியா திட்டம், ஜல்லிக்கட்டு போராட்டம், வினாயகர் சதுர்த்தி அரசியல் , மக்களின் புனித போராட்டங்கள் எவ்வாறு சமூக விரோதிகளால் வன்முறையாக மாற்றப்படுகிறது, போலிஸ் அதிகாரவர்க்கத்தின் ஆட்களாக இருப்பது, இதில் நல்ல போலிசும் உண்டு, என நடைமுறையில் உள்ள நிறைய விஷயங்கள் படத்தில் நேர்மறையாகவோ, எதிர்மறையாகவோ பேசப்பட்டிருக்கிறது. ரஜினி இந்த காட்சிகளில் நடித்திருப்பதன் மூலம் அவரது நிஜ வாழ்வின் கருத்துக்கள் எவ்வாறு திரிக்கப்படுகின்றது என்பதும் தெளிவாக வெளிபடுகிறது.

மக்களின் போராட்டம் முடிவுக்கு வரும் நிலையில் திட்டமிட்டு வகுப்பு கலவரம் உருவாக்க முயற்ச்சி நடக்கிறது. இரு தரப்பினரையும் பிரித்துவிடும் காலா, கோபத்தில் வெட்டிட்டு போங்கடா என்கிறார்…மக்கள் பின் வாங்க ஐந்து, ஆறு பேர் மட்டும் கையில் அறிவாளோடு நிற்க்கின்றனர். அப்போது காலாவின் முக மாறுதல்கள், இவர்கள் தன் மக்கள் இல்லை, போராட்டத்தை தூண்டிவிட வந்திருப்பவர்கள் என்பதை உணர்த்துகிறது, அவர்களை அடித்து விரட்டுங்கள் என்கிறான். இவ்வளவும் சில நொடிகளில் நடக்கிறது. கடைசி காட்சிகளில் எதிரிகளை வீழ்த்தவேண்டும் என்பதை விட தன் மக்களை ஆபத்து சூழ்ந்திருக்கிறது என்ற கலவரமும், கவலையும் காலாவின் முகத்தில் வெளிபடுகிறது. இங்கே தலைவனுக்கான இலக்கணம் சொல்லப்படுகிறது. தான் ஜெயிக்கவேண்டும், என்பதைவிட தான் வீழ்ந்தாலும் பரவாயில்லை தன் மக்கள் வாழவேண்டும் என நினைப்பவனே தலைவன் என அடித்து சொல்லியிருக்கிறார் ரஞ்சித். வசனங்கள் இல்லாத இந்த காட்சிகள் ரஜினியின் முக மாறுதல்களால் அட்டகாசமாக வெளிபடுத்தப்படிருக்கிறது.

ரஜினி-ஈஸ்வரி ராவ்- ஹூமா காட்சிகள் மிக யதார்த்தமாகவும், கண்ணியமாகவும், அழகியலோடும் காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது. அதுவும் முன்னாள் காதலர்களாக இஸ்லாமிய ஹூமா – இந்து ரஜினி. கத்திமேல் நடந்து ஜெயித்திருக்கிறார் ரஞ்சித். அதேபோல் Home maker, Single Mother, Revolutionary young girl என இவ்வளவு Strong ஆன மூன்று விதமான பெண்கள் கேரக்டர்களை தமிழ் சினிமாவில் பார்த்து பல வருடங்கள் ஆகிவிட்டது.

ஒரு காட்சியில் அஞ்சலி பட்டிலின் Salwar Bottom போலிசாரால் உருவப்படுகிறது. அதிர்ச்சியில் உறையும் அஞ்சலி தவழ்ந்து போகிறார், தன் துணியை எடுத்து தன் உடலை மறைக்க போகிறார் என்று நாம் எதிர்பார்க்கும்போது ( இதைத்தான் இதுவரை தமிழ் சினிமா பெண்கள் செய்திருக்கிறார்கள் ) அவள் தன் உடையை எடுக்காமல், தன் உடல் தெரிவதை பொருட்படுத்தாமல், அருகே கிடக்கும் கட்டையை எடுத்து தன் உடையை களைந்தவனை அடித்து துவைக்கிறாள். இங்கே காலம் காலமாக பெண்கள் மேல் திணிக்கப்பட்ட “உயிரைஉவிட மானமே பெரிது ” என்கிற கொள்கை அடித்து நொறுக்கப்பட்டு சுயகவுரமே முக்கியம் என்கிற விஷயம் முன்னிருத்தப்படுகிறது. எதை வைத்து பெண்கள் அடக்கிவைக்கப்படனரோ அதை அவள் உடைக்கிறாள்.

இது ஒரு முக்கியமான அரசியலை பேசும் படம் என்பதால் தன் Real Life Image பற்றி கவலைபடாமல் தனக்கு உடன்பாடில்லாத ஒரு சில விஷயங்களை கூட துணிந்து செய்திருக்கிறார் ரஜினிகாந்த். ரஜினியின் ஒப்புதல் இல்லாமல் ஒரு அணு கூட அசையாது என்பதால் படத்தின் கரு கெடாமல் அதன் வீச்சை முழு அளவில் மக்களிடம் கொண்டு சேர்த்ததன் மூலம் ரஜினிகாந்த் உயர்ந்து நிற்க்கிறார்.

ஒரு படைப்பாளியாக ரஞ்சித்துக்கும், ஒரு தேர்ந்த நடிகராக ரஜினிக்கும் காலா ஒரு மைல் கல். மிக வெளிப்படையாக ஒரு அரசியல் துணிந்து பேசப்பட்டிருக்கிறது. நிஜ வாழ்வில் நடந்தவைகள் காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது. கிளைமேக்ஸ் காட்சிகள் தமிழ் ஈழ தலைவர் மேதகு பிராபாகரனின் முடிவுக்கு பின்னும் மக்களின் மனநிலை என்ன என்பதை வைத்தே எடுக்கப்படிருக்கிறது. அவர்கள் புதைக்கப்படவில்லை, விதைக்கப்படிருக்கிறார்கள் என்பதை அந்த மக்கள் ஹரிதாதாவுக்கு அளிக்கும் முடிவின் மூலம் நெற்றிப்பொட்டில் அடித்து சொல்கிறார் ரஞ்சித்.

கடைசியாக ஒன்று : சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்கிற பிம்பத்துக்காக மட்டுமே படத்தை பார்க்க செல்பவர்கள் அதை தவிர்ப்பது நல்லது. இல்லையெனில் சூப்பர்ஸ்டார் என்கிற பிம்பத்தை தாண்டி ரஜினிகாந்த் என்கிற இயல்பான அருமையான நடிகரை ரசிக்கமுடியாமல் போய்விட நேரும். படத்தில் சொல்லப்பட்டிருக்கும் நுணுக்கமான் விஷயங்கள், தனித்துவம் மிக்க பலமான கதாபாத்திரங்கள், படம் பேசும் நில அரசியல், என எதுவும் நமக்கு புரிபடாமல் போகலாம். குறிப்பாக படத்தின் பிண்ணனி காட்சிகளில் தெரியும் அற்ப்புதமான குறியீடுகளை கவனியுங்கள்.

ஒரு திரைபடம் என்பது எப்போதும் வெறும் பொழுதுபோக்காக மட்டுமே இருக்கவேண்டும் என்பதில்லை. உலக திரைப்படங்கள் மண் சார்ந்து, கலாசாரம் சார்ந்து, வாழ்வியல் சார்ந்து, பிரச்சனைகள் சார்ந்து எடுக்கப்படுகின்றன. ஒரு திரைப்படம் மக்களின் வாழ்வியலை பிரதிபலிக்கவேண்டும். அவர்கள் பிரச்சனையை பேசவேண்டும். அவர்களை சூழ்ந்துள்ள அரசியலை வெளிபடுத்தவேண்டும். இந்த படத்தை உலகில் எந்த மூலையில் எவர் பார்த்தாலும் இது என்ன சொல்ல வருகிறது என்பது தெரியவேண்டும். அதுவே உலக படம். அந்த விஷயத்தில் காலா ஒரு உலக படம். இத பாருடா, இதுதாண்டா இங்க நடக்குது என்னும் உண்மையை முழுக்க முழுக்க ஒரு Genuinityயுடன் காலா சொல்லியிருக்கிறது. இந்த படத்தில் சொல்லப்படிருப்பது உண்மையா என்று எவரேனும் ஆராய்ந்தால் உண்மைதான் என தெரியவேண்டும். காலாவில் அது தெரியும். சேரிகளை கடக்கும்போதுகூட காரை வேகமாக ஓட்டி கடக்கும் மனிதர்களை, வாடா வந்து பாரு, எங்கள் வாழ்க்கை எவ்வளவு போரட்டங்கள் நிறைந்தது என்பதை காலா காட்டியிருக்கிறது.

இவ்வளவு ஒரு தைரியமான படத்தை எடுத்த ரஞ்சித்துக்கும், சில நூறு பேர்களுக்கு சென்று சேர்ந்திருக்கவேண்டிய ஒரு செய்தியை சில கோடி பேர்களுக்கு கொண்டு சேர்த்திருக்கும் “சூப்பர்ஸ்டார்” ரஜினிக்கும் ஒரு ராயல் சல்யூட்.

காலா என்னுடைய மதிப்பெண் : 4.00/5.00

மேலும் படிக்க