August 9, 2016 தண்டோரா குழு
மலைவாழ் பழங்குடி கர்ப்பிணிப் பெண்களை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல மோட்டார் சைக்கிள் ஆம்புலன்ஸ் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
மத்திய இந்தியாவின் பத்தாவது பெரிய மாநிலமான சத்தீஸ்கரில் உள்ள சில மலை கிராமங்கள் இன்னும் வெளி உலகுடன் தொடர்பு கொள்ள முடியாத நிலையில் உள்ளன.
அந்தக் கிராமங்களில் வாழும் மக்கள் மருத்துவமனைக்குப் பல கிலோமீட்டர் தூரம் செல்ல வேண்டிய நிலை. ஒரு அவசர நேரத்திற்கு உடனே செல்ல முடியாத நிலை வேறு அங்கு உள்ளது.
அவசரக் காலத்தில் ஆம்புலன்ஸ் உடன் தொடர்பு கொண்டு நோயாளிகளை உடனே மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதற்கு கால தாமதம் ஏற்படுகிறது. இதனால் அங்கு அதிகமாகப் பாதிக்கப்படுவது கர்ப்பிணிப் பெண்கள் தான்.
அதனால் மாநில சுகாதாரத்துறை, அரசு சாரா தொண்டு நிறுவனங்களுடன் சேர்ந்து மோட்டார் சைக்கிள் ஆம்புலன்ஸ் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.
இதன் மூலம் கர்ப்பிணி பெண்களைக் குறுகிய மலைப்பாதைகளில் விரைவாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல முடியும். இத்திட்டத்தால் சுமார் 200க்கும் மேற்பட்ட கர்ப்பிணி பெண்கள் பயன் அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.