August 10, 2016 தண்டோரா குழு
ஓடும் ரயிலில் 5 கோடியே 78 லட்சம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில், 4 பேரின் கைரேகைகள் சிக்கியுள்ளதாக தடயவியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். சேலத்தில் இருந்து சென்னைக்கு ரயில் மூலம் கொண்டு வரப்பட்ட 342 கோடி ரூபாயில், 5 கோடியே 78 லட்சம் ரூபாய் கொள்ளை அடிக்கப்பட்டது.
இது குறித்து பத்துக்கும் மேற்பட்ட தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் தமிழக காவல்துறை தலைவர் அசோக்குமார் கொள்ளைச் சம்பவம் நடைபெற்ற ரயில் பெட்டியை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்துள்ளார்.
இதனிடையே பணம் நிரப்புவதற்காக ஈரோட்டில் இருந்து ரயில் பெட்டி கொண்டு வரப்பட்டதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கொள்ளை நடந்த ரயில் பெட்டியின் மீது அமர்ந்து கொள்ளையில் ஈடுபட்டிருக்க வாய்ப்பில்லை என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே 4 பேரின் கைரேகைகள் சிக்கியுள்ளதாக தடயவியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். ரயில் பெட்டியை அறுத்து கொள்ளையில் ஈடுபட்ட போது, ஒருவருடைய கையில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும், அப்போது மர்ம நபரது ரத்தம் வெளியேறியதில் சில துளிகள் ரயில் பெட்டியில் இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
சேலம் ரயில் நிலையத்தில் பணம் இறக்கும் பணியில் ஈடுபட்ட சுமை தூக்கும் தொழிலாளர்களிடமும், வங்கி ஊழியர்களிடமும் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
சேலம் – விருத்தாசலம் வரை ரயில் பாதை மின்மயமாக்கப் படாததால் அப்பகுதியில் அங்குலம் அங்குலமாக ஆய்வுப் பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும் வடமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் இச்சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகிறது.