August 10, 2016 தண்டோரா குழு
2017ம் ஆண்டு நடக்கும் மணிப்பூர் சட்டப்பேரவை தேர்தலில் களம் காணப்போவதாகத் தனது 16 ஆண்டுக்கால உண்ணாவிரத போராட்டத்தை முடித்துக் கொண்ட இரோம் ஷர்மிளா தெரிவித்துள்ளார்.
மணிப்பூர் உள்ளிட்ட ஏழு மாநிலங்களில் 1958ம் ஆண்டு ஆயுதப் படை சிறப்பு அதிகாரச் சட்டம் அமல்படுத்தப்பட்டது. இதனால் அந்த மாநிலங்கள் முழுவதும் பாதுகாப்புப் படையினரின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. மேலும், சந்தேகத்திற்குரிய நபர்களையும் சுட்டுக் கொல்லும் அதிகாரத்தையும் பாதுகாப்புப் படையினர் பெற்றனர்.
இந்நிலையில், கடந்த 2000ம் ஆண்டு அஸ்ஸாம் ரைஃபிள்ஸ் படையினர், இம்பால் அருகே உள்ள கிராமத்தில் சந்தேகத்தின் பேரில் குழந்தைகள் உட்பட 10 பேரை சுட்டுக் கொன்றனர். இதை எதிர்த்து இரோம் சர்மிளா என்ற போராளி கடந்த 16 ஆண்டுகளாக உண்ணாவிரதம் இருந்து வந்தார்.
இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 16 ஆண்டுகளும் நீதிமன்ற காவலில் வைக்கப் பட்டிருந்தவருக்கு வலுக்கட்டாயமாக மூக்கு வழியாக உணவு செலுத்தப்பட்டது மட்டுமின்றி, அவர் மீது பல தற்கொலை முயற்சி வழக்குகளும் தொடரப்பட்டன. 16 ஆண்டுகளாகியும் அவரது கோரிக்கை ஏற்றுக்கொள்ளப் படவில்லை இந்நிலையில் இரோம் சர்மிளா தனது உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டார்.
இந்நிலையில் உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டதால் தன்னை விடுதலை செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார் ஷர்மிளா. இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி அவரை 10 ஆயிரம் ரூபாய் தனிநபர் பிணையுடன் விடுதலை செய்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து மாநில தலைநகர் இம்பாலில் செய்தியாளர்களைச் சந்தித்த ஷர்மிளா, எனக்கு இனி பாதுகாப்பு வேண்டாம் என்னையும் சமூகத்தில் சமமாக நடத்துங்கள் என்றும் மணிப்பூரின் இரும்பு பெண்மணி என என்னை மற்றவர்கள் அழைக்கிறார்கள். அவர்கள் கூறுவதற்கேற்ப மணிப்பூரின் இரும்பு பெண்மணியாக வாழ்ந்து காட்ட போகிறேன் என்றும் கூறினார்.
மேலும், தனக்கு அரசியல் பற்றி எதுவும் தெரியாவிட்டாலும், 2017ல் நடக்கும் மணிப்பூர் சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட்டு முதலமைச்சராகி மக்களுக்கு உதவி செய்ய நினைக்கிறேன் எனவும் முதலமைச்சர் ஆன பிறகு தான் இராணுவ சிறப்பு சட்டத்தை விலக்கமுடியும் எனவும் தெரிவித்தார்.