August 12, 2016 தண்டோரா குழு
பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் நேற்று மாலை அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள விமான நிலையத்தில் மீண்டும் தடுத்து நிறுத்தப்பட்டதாகத் தனது டிவிட்டர் பக்கத்தில் காட்டமான டுவீட்டை பதிவு செய்துள்ளார். விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்ட வேளையில் சுவாரஸ்யமான சில போக்கிமான்களை பிடிக்க முடிந்தது எனவும் அவர் டுவீட் செய்துள்ளார்.
அமெரிக்க விமான நிலையத்தில் பாதுகாப்பு எச்சரிகைக்காகப் பயணிகளை சோதனையிடும் போது பாலிவுட் நடிகர் ஷாருக்கானை குடியேற்றத் துறை அதிகாரிகள் தடுத்து நிறுத்தியதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இது குறித்த அவர் தனது டுவீட்டில், உலகின் பாதுகாப்புக்காக எடுக்கும் நடவடிக்கைகளை நான் மதிக்கிறேன், எனக்குப் புரிகிறது. ஆனால் ஒவ்வொரு முறையும் அமெரிக்க குடியேற்றத் துறையினரின் இந்த விசாரணை சகித்துக் கொள்ள முடியவில்லை என்று பதிவிட்டுள்ளார்.
லாஸ் ஏஞ்சல்ஸ் விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்ட வேளையில் சுவாரஸ்யமான சில போக்கிமான்களை பிடிக்க முடிந்தது எனவும் டுவீட் செய்துள்ளார்.
இதேப் போன்று, கடந்த 2012ம் ஆண்டு நியூயார்க் விமான நிலையத்தில் குடியேற்றத்துறை அதிகாரிகளின் விசாரணைக்காக ஷாருக்கான் சுமார் 2 மணி நேரம் தடுத்து நிறுத்தப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் இருந்து யாலே பல்கலைக்கழகத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ஷாருக்கான் சென்றார். அப்போது முகேஷ் அம்பானியின் மனைவி நீடா அம்பானியும் உடன் சென்று இருந்தார். ஆனால், நீடா அம்பானி குடியேற்றத்துறை அதிகாரிகள் சோதனை முடிந்த பிறகு உடனடியாக அனுப்பப்பட்ட பிறகும் ஷாருக்கானை விட அதிகாரிகள் மறுத்துவிட்டனர்.
இதனால், இரண்டு மணி நேரம் தாமதமாக பல்கலைக்கழகம் சென்று
உரையாற்றினார். அங்குப் பேசிய ஷாருக்கான், என்னை நினைத்து நான் தற்பெருமை கொள்ளும் போதெல்லாம் நான் அமெரிக்காவுக்கு வந்து விடுவேன் என்று கூறினார்.
அதற்கு முன்னதாக கடந்த 2009ம் ஆண்டு நெவார்க் விமான நிலையத்திலும் தடுத்து நிறுத்தப்பட்டார். இதனையடுத்து இந்திய தூதர் தலையிட்டதைத் தொடர்ந்து விமான நிலைய அதிகாரிகள் மன்னிப்பு கோரினர் என்பது குறிப்பிடத்தக்கது.