July 7, 2018 தண்டோரா குழு
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘சர்க்கார்’.சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்து வரும் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் அண்மையில் வெளியானது.அந்த போஸ்டர்களில் விஜய் புகைபிடிப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றன.
இப்போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றாலும் மறுபுறம் இதற்கு எதிர்ப்புகள் கிளம்பின.இதற்கிடையில்,புகைபிடித்தபடி விஜய் இருக்கும் படங்களை உடனே இணையதளங்கள், சமூக வலைதளங்கள் மற்றும் அனைத்து இடங்களிலும் இருந்து நீக்க வேண்டுமென்று பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தியது.
இதையடுத்து,சர்கார் பர்ஸ்ட் லுக்கில் விஜய் புகைப்பிடிக்கும் காட்சியை தனது ட்விட்டர் பக்கத்திலிருந்து சன் பிக்சர்ஸ் நிறுவனம் நீக்கியுள்ளது.இந்நிலையில் இந்த சர்ச்சை பற்றி மூடர்கூடம் பட இயக்குனர் நவீன் ட்விட்டரில் கோபமாக பதிவிட்டுள்ளார்.
அதில், “ஒரு மாஸ் ஹீரோவை பார்த்து மட்டும் புகைபிடிக்க ஆரம்பிக்கும் அளவுக்கு மக்கள் என்ன முட்டாளா⁉ இதெல்லாம் சினிமா வருவதற்கு முன்பே வந்தவை.ஒரு ஸ்டாரை மட்டும் ஏன் டார்கெட் செய்ய வேண்டும்” என விஜய்க்கு ஆதரவாக நவீன் பேசியுள்ளார்.