July 18, 2018
தண்டோரா குழு
இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று,தொடரைக் கைப்பற்றியுள்ளது.
இந்திய இங்கிலாந்து இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற்றது.இதில் முதல் போட்டியில் இந்திய அணியும்,இரண்டாவது போட்டியில் இங்கிலாந்து அணியும் வெற்றி பெற்றன.இந்நிலையில்,கோப்பையைத் தீர்மானிக்கும் 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது.
இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரா் ரோகித் ஷா்மா 2 ரன்களில் வெளியேற,ஷிகர் தவான்,கோலி கூட்டணி பொறுப்புடன் ஆடியது.
தவான் 49 பந்துகளில் 44 ரன்கள் எடுத்த நிலையில் ரன்அவுட் ஆனார்.கேப்டன் கோலி 72 பந்துகளில் 71 ரன்கள் சோ்த்த நிலையில் ரஷித் பந்து வீச்சில் வெளியேறினார்.தொடா்ந்து சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் சரிந்து கொண்டு இருந்த நிலையில்,இறுதியில் இந்திய அணி 50 ஓவா் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 256 ரன்கள் சோ்த்தது.
இதையடுத்து,257 ரன்கள் எடுத்தால் வெற்றி என களமிறங்கிய இங்கிலாந்து அணி,ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடியது.ரூட் மற்றும் கேப்டன் இயன் மார்கன் இருவரும் அதிரடியாக விளையாடி ரன்களை சேர்க்கத் தொடங்கினர்.
இதனால் இங்கிலாந்து அணி 44.3 ஓவர்களில் 2 விக்கெட்களை மட்டும் இழந்து 260 ரன்களை குவித்து, 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இங்கிலாந்து அணியில் ரூட் 100 ரன்களுடனும், மார்கன் 88 ரன்களுடனும் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.இந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்து அணி,ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் வென்றுள்ளது.