July 20, 2018
tamilsamayam.com
இந்தியாவில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை என்பதால் சென்னையில் நடக்கும் உலக ஜூனியர் ஸ்குவாஷ் தொடரில் இருந்து சுவிட்சர்லாந்து வீராங்கனை விலகியது தெரியவந்துள்ளது.
தமிழ்நாடு ஸ்குவாஷ் சங்கம் சார்பில் உலக ஜூனியர் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் தொடர் சென்னையின் எக்ஸ்பிரஸ் அவென்யூ மாலில் நடக்கிறது.வரும் 29ம் தேதி வரை இத்தொடர் நடக்கவுள்ளது.
இத்தொடரில் ஆஸ்திரேலியா,கொலம்பியா,கனடா,செக் குடியரசு,அர்ஜென்டினா,இங்கிலாந்து, எகிப்து,பின்லாந்து,ஜெர்மனி,பிரான்ஸ்,சீனா,ஹாங்காங்,இந்தியா,ஈரான்,அயர்லாந்து உள்ளிட்ட 28 நாடுகளின் 171 வீரர்,வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்.
இந்நிலையில் இந்தியாவில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை என்பதால் சென்னையில் நடக்கும் உலக ஜூனியர் ஸ்குவாஷ் தொடரில் இருந்து சுவிட்சர்லாந்தின் “நம்பர்-1” வீராங்கனையான அம்ரே அலின்க்ஸ் விலகியது தெரியவந்துள்ளது.
உலக ஜூனியர் ஸ்குவாஷ் தொடர் சென்னையில் நடக்கும் என அறிவித்த நாளே 16 வயதான அம்ரே அலின்க்ஸில் பெற்றோர்கள்,இந்தியாவில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பதால் அவரை இத்தொடரில் பங்கேற்க அனுமதி அளிக்கவில்லை என சுவிட்சர்லாந்து பயிற்சியாளர் பாஸ்கல் தெரிவித்தார்.
இது தொடர்பாக சுவிட்சர்லாந்து பயிற்சியாளர் பாஸ்கல் கூறுகையில்,
“இணைதளத்தில் உள்ள குற்றச் சம்பவங்களை படித்துவிட்டு அம்ரே அலின்க்ஸை அவரின் பெற்றோர்கள் இத்தொடருக்கு அனுப்ப மறுத்துவிட்டனர்.நான் எவ்வளவு எடுத்துச்சொல்லியும் அவர்கள் கேட்கவில்லை.அம்ரே அலின்க்ஸில் எங்கள் அணியின் நம்பர்-1 வீராங்கனை.விளையாட்டை விட தங்கள் குழந்தையின் பாதுகாப்பு தான் அவர்களுக்கு முக்கியம் என்பதால் அதற்கு மேல் என்னால் அவர்களிடம் எதுவும் பேசமுடியவில்லை.”என்றார்.