July 20, 2018
தண்டோரா குழு
பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர் ஃபகார் ஜமான் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் இரட்டை சதம் விளாசி சாதனை படைத்துள்ளார்.
ஜிம்பாப்வேவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி,5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.முதல் மூன்று போட்டிகளிலும் வென்று பாகிஸ்தான் அணி ஏற்கனவே தொடரை கைப்பற்றியது.நான்காவது ஒருநாள் போட்டி ஹராரே மைதானத்தில் நடைபெற்று வருகிறது.இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
தொடக்க வீரர்களாக களமிறங்கிய இமாம் உல் ஹக் மற்றும் ஃபகார் ஜமான் ஆகிய இருவரும் ஜிம்பாப்வே அணியின் பந்துவீச்சை பறக்கவிட்டனர்.இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 42 ஓவர்களில் 304 ரன்கள் குவித்தது.இமாம் உல்ஹக் 122 பந்துகளில் 113 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
பாகிஸ்தான் அணி சார்பில் சர்வதேச ஒருநாள் போட்டியில் எந்த விக்கெட்டும் இழக்காமல் எடுக்கப்பட்ட அதிகபட்ச பாட்னர்ஷிப் இதுவாகும்.அதைபோல் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் முதல் விக்கெட் ஜோடி குவித்த அதிகபட்ச ரன்களும் இது தான்.இதையடுத்து ஜமானுடன் ஆசிஃப் அலி ஜோடி சேர்ந்தார்.
இந்த ஜோடியும் அதே ரன்ரேட் குறைந்துவிடாமல் ஆடியது.அதிரடியாக ஆடிய ஜமான்,இரட்டை சதம் விளாசினார்.இதன் மூலம் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இரட்டை சதமடித்த முதல் பாகிஸ்தான் வீரர் என்ற சாதனையை அவர் படைத்தார்.இதற்கு முன்பாக சயீத் அன்வர் எடுத்த 194 ரன்களே பாகிஸ்தான் வீரர் ஒருவர் எடுத்த அதிகபட்ச ஸ்கோராக இருந்து வந்தது.
இமாமைத் தொடர்ந்து களமிறங்கிய ஆசிஃப் அலி,22 பந்துகளில் அரை சதமடித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.இதன்மூலம்,பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 399 ரன்கள் குவித்தது.
இரட்டை சதம் விளாசிய ஜமான்,சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இரட்டை சதமடித்த ஆறாவது வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.இதற்கு முன் சச்சின் டெண்டுல்கர்,வீரேந்திர சேவாக்,ரோஹித் சர்மா,மார்டின் கப்டில்,கிறிஸ் கெய்ல் ஆகியோர் இரட்டை சதமடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.