August 16, 2016
தண்டோரா குழு
சேலம் மாவட்டம் ஆத்தூரை அடுத்த கெங்கவல்லியில் கேரள மாநிலத்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் முத்தூட் பைனான்ஸ் நிறுவனத்தின் மினி வங்கி என்ற கிளை செயல்பட்டு வருகிறது. இங்கு நகைக்கடன் மட்டுமே கொடுக்கப்பட்டு வந்தது.
இந்த வங்கி நேற்றும் நேற்று முன்தினமும் விடுமுறை என்பதால் பூட்டியிருந்தது. இதை சாதகமாகப் பயன்படுத்திக்கொண்ட மர்ம நபர்கள் நள்ளிரவில் வங்கியின் ஜன்னல் கம்பிகளை உடைத்து உள்ளே சென்று அடமானம் வைக்கப்பட்டிருந்த சுமார் 730 சவரன் நகைகளை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
பின்னர் காலை தகவலறிந்து வந்த காவல்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். இந்நிலையில் ஆத்தூர் டி.எஸ்.பி நமச்சிவாயம், சங்ககிரி டி.எஸ்.பி கந்தசாமி, வாழப்பாடி டி.எஸ்.பி சோமசுந்தரம் ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைத்து கொள்ளையர்களை தேடிவருகின்றனர்.