August 17, 2016 தண்டோரா குழு
மகாராஷ்டிரா மாநிலத்தில் சுமார் 6 பேரைக் கடத்தி கொலை செய்து அவர்களை தன் பண்ணை வீட்டில் புதைத்த மருத்துவர் ஒருவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்தவர் டாக்டர் சந்தோஷ் பால். இவர் 5 பெண்கள் உள்பட 6 பேரைக் கொலை செய்து தனது பண்ணை வீட்டில் புதைத்துள்ளார்.
இதையடுத்து சந்தோஷ் பால் கடந்த சனிக்கிழமை கைது செய்யப்பட்டார்.
மேலும், மங்கள் ஜுதே என்ற பெண் புனேவில் உள்ள தனது மகளைப் பார்ப்பதற்காக சதாரா என்னும் நகரில் உள்ள வொய் பகுதியில் உள்ள பேருந்து நிலையத்திற்குச் சென்றுள்ளார். ஆனால், அவர் பேருந்து ஏறவில்லை. அவர் மாயமாகிவிட்டார்.
இது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரில், போலீஸார் மங்க ஜுதேவை தேடும் பணியில் ஈடுபட்டனர்.மங்கள் ஜுதேவின் கைப்பேசி செயல்பாடுகளைத் தீவிரமாக போலீஸார் கண்காணித்தனர்.
அப்போது, டாக்டர். சந்தோஷ் பாலின் வீட்டில் இருந்து அந்த செல்போன் சிக்னல் வருகிறது என்பதைக் கண்டறிந்தனர்.
இது தொடர்பாக சந்தோஷ் பாலின் மருத்துவமனையில் பணியாற்றும் செவிலியர் ஒருவரிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். அப்போது, டாக்டர். பால், மங்கள் ஜுதேவை கடத்தி விஷ ஊசியைச் செலுத்தி அவரைக் கொலை செய்ததாக அவர் தெரிவித்தார்.
மேலும், சந்தோஷ் பாலிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர் 6 பேரைக் கொலை செய்தது தெரியவந்தது. இதில் கொலை செய்யப்பட்ட சிலர் கடந்த 2003ம் ஆண்டு முதல் மாயமானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
கொலை செய்யப்பட்ட 5 பெண்கள், 1 ஆண் சடலத்தை அவர் தனது பண்ணை வீட்டில் புதைத்துள்ளார்.அபாயகரமான மருந்துகளை அவர்களுக்குத் தேவைக்கு அதிகமாகக் கொடுத்து கொலை செய்ததாக சந்தோஷ் பால் குற்றத்தை ஒப்புக்கொண்டார்.
விசாரணையின் போது செவிலியர் மற்றும் கொலை செய்யப்பட்ட பெண்ணுடன் நெருங்கிய தொடர்பு இருந்ததாக அவர் தெரிவித்தார். ஆனால், எதற்காக அந்த 6 பேரைக் கொலை செய்தார் என்பது குறித்த இதுவரை எந்தத் தகவலும் இல்லை.