August 3, 2018
தண்டோரா குழு
இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி சதமடிக்க முதல் இன்னிங்சில் இந்திய அணி 274 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இதில் முதல் டெஸ்ட் போட்டி பர்மிங்ஹாமில் துவங்கியது.டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் ஜோ ரூட்,முதலில் பேட்டிங் தேர்வு செய்தார்.
இதில் இங்கிலாந்து அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் முதல் இன்னிங்சில்,9 விக்கெட்டுக்கு 285 ரன்கள் எடுத்திருந்தது.இந்நிலையில் இரண்டாவது நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி கூடுதலாக 2 ரன்கள் மட்டும் சேர்த்த நிலையில் 287 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.இந்திய அணி சார்பில் அஷ்வின் அதிகபட்சமாக 4 விக்கெட்டும்,ஷமி 3 விக்கெட்,உமேஷ் யாதவ், இஷாந்த் ஆகியோர் தலா 1 விக்கெட் சாய்த்தனர்.
பின்னர் களமிறங்கிய இந்திய அணியின் வீரர்கள் அடுத்தடுத்து வெளியேற கேப்டன் கோலி, பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி டெஸ்ட் அரங்கில் தனது 22வது சதத்தை பூர்த்தி செய்தார்.
இந்நிலையில் கோலி 149 ரன்கள் எடுத்த போது,ரசித் சுழலில் சிக்க இந்திய அணி 274 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி 13 ரன்கள் பின்தங்கியுள்ளது.