August 19, 2016
தண்டோரா குழு
ஒவ்வொரு ஆண்டும் கேரளா மாநிலத்தில் நடைபெறும் முக்கிய பண்டிகைகளில் ஓணம் பண்டிகை முக்கிய இடத்தைப் பெறுகிறது. இப்பண்டிகையை ஒட்டி குடிமகன்களின் வசதிக்காக ஆன்லைன் மூலமாக மதுவை வாங்கும் வசதியைக் கேரளா அரசு அறிமுகப்படுத்தவுள்ளது.
கேரளாவில் முந்தைய காங்கிரஸ் தலைமையிலான அரசு படிப்படியாக மதுவிலக்கு என்ற திட்டத்தின்படி, சுமார் 700க்கும் அதிகமான மதுபான கடைகளை மூடியது. இதனால் தற்போது நட்சத்திர ஓட்டல்கள் மற்றும், கன்ஸ்யூமர்பெட் எனப்படும், கேரள அரசு நிறுவனம் நடத்தும் கடைகளில் மட்டுமே மது வகைகள் கிடைக்கின்றன.
தற்போது கேரளாவில் இடது ஜனநாயக முன்னணி கூட்டணி அரசின் சார்பில் மார்க்சிஸ்ட் மூத்த தலைவர் பினராயி விஜயன் முதல்வராக உள்ளார்.
இந்நிலையில், அடுத்த மாதம் 13ம் தேதி கேரளாவில் மிகவும் பிரசித்தி பெற்ற பண்டிகையான ஓணம் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. மேலும் 10 நாட்களுக்கு முன்பே இந்தக் கொண்டாட்டங்கள் தொடங்கி விடும்.
எனவே, தொடர் விடுமுறையை முன்னிட்டு மதுவிற்பனையும் அதிகமாக இருக்கும். சொற்ப அளவில் உள்ள மதுக்கடைகளில் குடிமகன்கள் கூட்டம் அலைமோதும். வெயிலையும் பொருட்படுத்தாது வரிசையில் நின்று மதுவை வாங்கி, கடமையைக் கண் எனச் செய்வர்.
இதனால் அவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, ஆன்லைனில் மது வகைகளை முன்பதிவு செய்யும் வசதியை, கன்ஸ்யூமர்பெட் நிறுவனம் அறிமுகம் செய்யவுள்ளது.
இதன்படி, முன்பதிவு செய்து பெறும் ரசீதை, மதுக் கடைகளில் தனியாக அமைக்கப்படும் சிறப்பு கவுண்டரில் காட்டி, உடனடியாக மது வகைகளை பெற்றுச் செல்லலாம்.
இதற்காக, சிறு தொகையை கட்டணமாகச் செலுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.ஒரு புறம் மதுஒழிப்பு என கோசம் போடும் அரசியல் கட்சிகள் தாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் அதற்கு எதிரான நடவடிக்கைகளை எடுப்பது வாடிக்கையாக உள்ளது.