August 13, 2018 தண்டோரா குழு
6 கோடி ரூபாய் பணத்தை கையாடல் செய்த புகாரில்,அண்ணா தொழிற்சங்க பேரவையின் மாநில செயலாளராக இருந்த சின்னசாமி கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
கோவை சிங்காநல்லூர் தொகுதியில் 2011 முதல் 2016 வரை அதிமுக எம்.எல்.ஏ.வாக இருந்தவர் சின்னசாமி.இவர் அண்ணா தொழிற்சங்க மாநிலச் செயலாளராக இருந்தார்.இதற்கிடையில், சின்னசாமி கடந்த பிப்ரவரியில் அண்ணா தொழிற்சங்க பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டார்.
இந்நிலையில்,அண்ணா தொழிற்சங்கத்தின் தற்போதைய செயலாளர் ஜக்கையன் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் அளித்த புகாரில்,சின்னசாமி 6 கோடி ரூபாய் அளவுக்கு கையாடல் செய்திருப்பதாக கூறப்பட்டிருந்தது.
இந்த புகாரின் அடிப்படையில் சின்னசாமி மீது நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த சென்னை மத்திய குற்றப்பிரிவு ஆவணமோசடி தடுப்பு போலீசார்,சின்னசாமியை நேற்று கோவையில் கைது செய்தனர்.
இதையடுத்து,அவர் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார்.இதனைத்தொடர்ந்து அவரை 27ஆம் தேதி வரை காவலில் அடைக்க எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.