August 22, 2018
தண்டோரா குழு
இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 203 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.
இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.இதில் முதல் 2 டெஸ்ட் போட்டிகளில் இங்கிலாந்து வென்று 2-0 என முன்னிலை வகிக்கின்றது.
இந்நிலையில் நாட்டிங்காம்மில் நடைபெற்ற மூன்றாவது டெஸ்ட் போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 329 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.இந்திய அணி சார்பில் விராட் கோலி அதிகபட்சமாக 97 ரன்களை எடுத்தார்.பின்னர் விளையாடிய இங்கிலாந்து அணி 161 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது.
பின்னர் இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடிய இந்திய அணி 352 ரன்கள் எடுத்த போது டிக்லெர் செய்து,இங்கிலாந்து அணிக்கு 521 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது.
இதனையடுத்து 2வது இன்னிங்ஸில் களமிறங்கிய இங்கிலாந்து அணி 62 ரன்கள் எடுத்த போதே 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. ஆனால்,அதன் பின்னர் ஜோடி சேர்ந்த பென் ஸ்டோக் மற்றும் ஜோஸ் பட்லர் ஜோடி மிக சிறப்பாக விளையாடி ரன்களை குவித்தனர். பட்லர் டெஸ்ட் அரங்கில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார்.
ஆனால்,நான்காம் நாள் ஆட்ட இறுதியில் அவர்கள் இருவரும் ஆட்டமிழந்ததும் 2வது இன்னிங்சில் இங்கிலாந்து அணி 9 விக்கெட்டு இழப்பிற்கு 311 ரன்கள் எடுத்திருந்தது.ரஷித்(30),ஆண்டர்சன்(8) அவுட்டாகாமல் இருந்தனர்.
இந்நிலையில் இன்று நடைபெற்ற ஐந்தாவது மற்றும் கடைசி நாள் ஆட்டத்தில் போட்டி துவங்கிய 10வது நிமிடத்தில் அஷ்வின் சுழலில் ஆண்டர்சன் வெளியேற,இங்கிலாந்து அணி 2வது இன்னிங்சில் 317 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.இதன் மூலம் இந்திய அணி 203 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.