August 23, 2018
தண்டோரா குழு
டெஸ்ட் பேட்ஸ்மேன் தரவரிசை பட்டியலில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி மீண்டும் முதலிடம் பிடித்துள்ளார்.
இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இங்கிலாந்து அணி 2 டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய அணி ஒரு போட்டியிலும் வென்றுள்ளது. இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பர்மிங்ஹாமில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில்149, 51 ரன்கள் எடுத்ததைத் தொடர்ந்து டெஸ்ட் போட்டிகளில் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசைப்பட்டியலில் முதலிடத்தைப் பிடித்தார்.ஆனால், லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த 2-வது டெஸ்ட் போட்டியில், 40 ரன்கள் மட்டுமே அடித்ததால், 2-வது இடத்திற்கு இறங்கினார்.
எனினும்,நாட்டிங்ஹாமில் நடந்த 3-வது டெஸ்ட் போட்டியில் சதம் அடித்து, அணியின் வெற்றிக்கு முக்கியக் காரணமாக இருந்ததையடுத்து, தரவரிசையில் மீண்டும் முதலிடத்தை விராட் கோலி பிடித்துள்ளார்.தற்போது 937 புள்ளிகள் பெற்று விராட் கோலி, முதலிடத்தில் உள்ளார். ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் 929 புள்ளிகளுடன் 2-ம் இடத்தில் உள்ளார். நியூசிலாந்து வீரர் கேன் வில்லியம்ஸன் 847 புள்ளிகளுடன் 3-ம் இடத்திலும், டேவிட் வார்னர் 820 புள்ளிகளுடன் 4-ம் இடத்திலும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.