September 1, 2018
தண்டோரா குழு
இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 4வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 273 ரன்கள் குவித்து,இங்கிலாந்தை விட 27 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது.
இந்தியா,இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 4-வது டெஸ்ட் போட்டி சவுத்தம்டன் நகரில் நடைபெற்று வருகிறது.இதில் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 246 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.இங்கிலாந்து அணியில் அதிகபட்சமாக சாம்குர்ரன் 78 ரன்னும்,மொய்ன்அலி 40 ரன்னும் எடுத்தனர்.
பின்னர் களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர்கள் ஷிகர் தவன் 23 ரன்களிலும்,லோகேஷ் ராகுல் 19 ரன்களிலும் ஸ்டூவர்ட் பிராட் பந்தில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர்.
அடுத்து ஜோடி சேர்ந்த கேப்டன் விராட் கோலியும், புஜாராவும் மெதுவாக ரன்களையும் சேர்த்தனர்.புஜாராவும்,கோலியும் 3-வது விக்கெட்டுக்கு 92 ரன்கள் சேர்த்த நிலையில், கோலி 46 ரன்களில் வெளியேறினார்.இதனை தொடர்ந்து ஒரு முனையில் விக்கெட்கள் வீழ்ந்தாலும் புஜாரா, தனது 15-வது சதத்தை பூர்த்தி செய்தார். இறுதியில் இந்திய அணி 273 ரன்கள் குவித்து,இங்கிலாந்தைவிட 27 ரன்கள் முன்னிலைப் பெற்றது.இங்கிலாந்தின் மொயின் அலி 63 ரன்கள் விட்டுக்கொடுத்து 5 விக்கெட்கள் வீழ்த்தினார்.ஸ்டூவர்ட் பிராட் 3 விக்கெட்களை சாய்த்தார்.2-வது நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி 4 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி, 6 ரன்கள் சேர்த்துள்ளது.
இப்போட்டியில் விராட் கோலி,டெஸ்ட் அரங்கில் 6000 ரன்களை கடந்தார்.மேலும்,கவாஸ்கருக்கு அடுத்தப்படியாக குறைந்த இன்னிங்சில் 6000 ரன்களை கடந்த இந்திய வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.