September 3, 2018
தண்டோரா குழு
இந்திய அணிக்கு எதிரான நான்காவது டெஸ்டில்,இங்கிலாந்து அணி 60 ரன்கள் வித்தியாசத்தில் வென்று,தொடரை 3-1 என கைப்பற்றியது.
இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 4வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சவுத்தாம்டனில் நடந்தது.இதில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 246 ரன்கள்,இந்தியா 273 ரன்கள் எடுத்தது.இரண்டாவது இன்னிங்சில் இங்கிலாந்து அணி,271 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி இந்திய அணிக்கு 245 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது.
பின்னர் களமிறக்கிய இந்தியாவின் தொடக்க ஆட்டக்காரர்கள் தவான் (17),ராகுல் (0),புஜாரா (5) என சொற்ப ரன்களில் வெளியேறினர்.இதனால் இந்தியா 22 ரன்கள் எடுப்பதற்குள் மூன்று விக்கெட்டுக்களை இழந்து தடுமாறியது.4-வது விக்கெட்டுக்கு கோலி உடன் ரகானே ஜோடி சேர்ந்தார்.இருவரும் வழக்கம் போல நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.இந்நிலையில் கோலி (58) ரன்களிலும்,அரைசதம் அடித்து கைகொடுத்த ரகானே (51) வெளியேற,போட்டி இங்கிலாந்து அணி பக்கமாக திரும்பியது.
பின்னர் களமிறங்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேற இந்திய அணி 69.4 ஓவர்கள் முடிவில் 184 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 60 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.இதன் மூலம் டெஸ்ட் தொடரை இங்கிலாந்து அணி 3-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.