August 24, 2016 தண்டோரா குழு
ஜம்மு காஷ்மீரில் நிலவும் அமைதியற்ற சூழ்நிலையை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அங்குச் செல்கிறார்.
காஷ்மீரில் பயங்கரவாதி பர்கான் வானி ஜூலை 8ம் தேதி என்கவுண்டரில் கொல்லப்பட்டதை தொடர்ந்து அங்கு அமைதியற்ற சூழ்நிலை நீடித்து வருகிறது.பிரிவினைவாதிகளின் வன்முறை மற்றும் பாதுகாப்பு படையினரின் அதிரடி நடவடிக்கைகளால் 2 போலீசார் உள்பட சுமார் 65 பேர் அங்கு உயிரிழந்துள்ளனர்.மேலும் ஆயிரக்கணக்கானோர் காயமடைந்து மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
சுமார் 40 நாட்களுக்கு மேலாக நீடித்து வரும் இந்த வன்முறையால் மக்களின் இயல்பு வாழ்க்கை அதிகமாகப் பாதிக்கப்பட்டுள்ளது.அம்மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து ஊரடங்கு உத்தரவும் அமல்படுத்தப்பட்டுள்ளது.
காஷ்மீரில் நிலவி வரும் இந்த அமைதியற்ற சூழ்நிலை குறித்து கருத்துத் தெரிவித்துள்ள ராஜ்நாத் சிங்,இந்திய அரசைப் பொறுத்தவரையில் காஷ்மீருடன் உணர்வுரீதியான உறவை வலுப்படுத்தவே விரும்புகிறது.தேவைப்படும் நேரத்தில் மட்டும் காஷ்மீரை பயன்படுத்திக்கொள்ள விரும்பவில்லை.
மேலும் காஷ்மீரில் அமைதி திரும்பி மக்கள் இயல்பாக வாழ்க்கையை நடத்த அனைத்துத் தரப்பினரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
மேலும்,ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஒமர் அப்துல்லா தலைமையிலான மாநில எதிர்க்கட்சிக் குழுவினர் இந்திய தலைநகரான டெல்லிக்கு வருகை தந்து குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோரைச் சந்தித்து காஷ்மீர் பிரச்சனைக்கு அரசியல் ரீதியிலான தீர்வுகாண வேண்டுமென்று வலியுறுத்தினர்.இந்தச் சூழ்நிலையில் ராஜ்நாத் சிங் காஷ்மீருக்கு பயணம் மேற்கொள்கிறார்.