August 24, 2016 தண்டோரா குழு
இத்தாலியில் இன்று அதிகாலை சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டது.இத்தாலியில் உள்ள அக்குமோலி,அமாட்ரைஸ் உள்ளிட்ட பல நகரங்களில் நில நடுக்கத்தால் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
அங்குப் பல கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகின.மேலும் நிலநடுக்க இடிபாடுகளில் சிக்கி 14 பேர் உயிரிழந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ள நிலையில்,உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது என்ற தகவல் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இத்தாலி நாட்டின் மத்திய தெற்கு பகுதிகளில் இன்று அதிகாலை கடுமையான நில நடுக்கம் ஏற்பட்டது.ரிக்டர் அளவுகோலில் 6.2 என்ற அளவில் பதிவான இந்த நிலநடுக்கத்தை,அந்த நாட்டு நேரப்படி அதிகாலை 3.36 மணிக்கு மக்கள் உணர்ந்துள்ளனர்.
ரோம் நகரத்தில் சுமார் 20 வினாடிகள் கட்டிடங்கள் குலுங்கியதை உணர முடிந்துள்ளது.முதலில் நில நடுக்கம் 6.4 ரிக்டர் அளவுக்குக் கடுமையாக இருந்ததாகத் தகவல்கள் வெளியாகின.ஆனால் அது 6.2 என்ற அளவுக்கு இருந்ததாக அமெரிக்க ஆய்வு அமைப்பு கூறியுள்ளது.
அக்குமோலி, அமாட்ரைஸ் உள்ளிட்ட நகரங்களில் நிலநடுக்கத்தால் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
குட்டி நகரமான அமாட்ரைசில், பாதி ஊர் தரைமட்டமாகிவிட்டதாக அந்நகர மேயர் கூறியுள்ளதில் இருந்து பாதிப்பின் தீவிரத்தை உணர முடியும்.இடிபாடுகளுக்குள் சிக்கி 14 பேர் உயிரிழந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
ஆனால் சேதம் அதிகம் என்பதால்,உயிரிழப்புகளும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.2009ம் ஆண்டு இதே அளவுக்குச் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தாக்கியதில்,இத்தாலியில் சுமார் 300 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவின் வடக்கு மற்றும் வட கிழக்கு மாநிலங்களில் நேற்று முன்தினம்,மற்றும் நேற்று லேசான நிலநடுக்கம் உணரப்பட்ட நிலையில், இத்தாலியிலும் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.