August 26, 2016 தண்டோரா குழு
திருவனந்தபுரம்: கேரள முதல்வர் பினராயி விஜயன் தான் படித்த பள்ளியில் ஆசிரியர் தினமான செப்.5-ந் தேதி வகுப்பு எடுக்கத் திட்டமிட்டுள்ளார். இதேபோல மற்ற எம்எல்ஏ-க்களும் தங்களது தொகுதிகளுக்குட்பட்ட பள்ளிகளில் அன்று வகுப்பு எடுத்து மாணவர்களுடன் சகஜமாக பழக வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.
கம்யூனிஸ்ட் முதல்வரைகளை விடக் கேரள முதல்வர் பினராயி விஜயனின் செயல்பாடுகள் புதுமையாக விளங்குகிறது. ஏனெனில், பிரசித்தி பெற்ற சபரிமலைக்கு இதுவரை எந்த கம்யூனிஸ்ட் முதல்வரும் செல்லாத நிலையில், முதல் முறையாக பினராயி விஜயன் சபரிமலை சென்று அங்கு நடைபெறும் வளர்ச்சிப் பணிகளை பார்வையிட்டார்.
மேலும், கேரள தலைமைச் செயலகத்தில் முதல்வருக்கும் பொதுமக்களுக்கும் இடையே இருந்த பல்வேறு தடைகளை அகற்றிய பினராயி விஜயன், பொதுமக்கள் சுலபமாக முதல்வரைச் சந்திக்கும் வகையில் ஏற்பாடு செய்தார்.
இந்நிலையில் ஆசிரியர் தினமான செப்டம்பர் 5-ந் தேதி பினராயி விஜயன் ஒரு நாள் ஆசிரியராக மாறுகிறார். அன்று அவர் தனது சொந்த தொகுதியான பினராய்க்கு சென்று அங்கு தான் படித்த அரசுப் பள்ளியில் மாணவர்களுக்குப் பாடம் வகுப்பு எடுக்கத் திட்டமிட்டுள்ளார்.
இதேபோல, அனைத்து எம்.எல்.ஏ.க்களும் தங்கள் தொகுதிக்கு உட்பட்ட அரசுப் பள்ளிகளுக்கு அன்று சென்று ஒரு நாள் வகுப்பு எடுத்து, மாணவர்களுடன் சகஜமாக பழகி நெருக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்று பினராயி விஜயன் உத்தரவிட்டுள்ளார்.