August 27, 2016 தண்டோரா குழு
வடமாநிலங்களில் வரலாறு காணாத அளவு பெய்து வரும் கனமழையால் உத்தரப்பிரதேசத்தில் மட்டும் சுமார் 8 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல் பீகாரில் வெள்ளம் காரணமாக இந்தாண்டு மட்டும் இதுவரை பலியானோர் எண்ணிக்கை 149 ஆக உயர்ந்துள்ளது.
உத்தரபிரதேசம், பீகார், மேற்கு வங்காளம், உத்ரகாண்ட், மத்திய பிரதேசம் உள்ளிட்ட வடமாநிலங்களில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுக் குடியிருப்புகளை தண்ணீர் சூழ்ந்து உள்ளது.
இதனால் பலர் வீடுகளை இழந்து தவிக்கிறார்கள். மேலும் மழை வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் நடவடிக்கையில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் ஈடுபட்டு வருகிறார்கள். இந்தக் கனமழையின் காரணமாக உத்தரபிரதேசத்தில் கங்கை நதியில் அபாய கட்டத்தை தாண்டி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது.
இதனால் வாரணாசி, அலாகாபாத், காஸிப்பூர், பலியா உள்பட சுமார் 28 மாவட்டங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதுவரை 987 கிராமங்களைச் சேர்ந்த 8.7 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் சில மாவட்டங்களில் நேற்றும் கனமழை பெய்துயுள்ளது.
மேலும், அவ்விடங்களில் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக இயற்கை பேரிடர் மீட்பு துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனிடேயே பீகாரிலும் பல கிராமங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளதால் மக்கள் தூக்கத்தை தொலைத்துத் தவித்து வருகின்றனர்.
கன மழையால் பாதிக்கப்பட்ட புசார், போஜ்பூர், பாட்னா, வைஷாலி, சரண், பெகுசாரை, சமஸ்திபூர், லக்ஹிசறை, காகரியா, முன்கர், பகல்பூர் மற்றும் கடிகர் ஆகிய இடங்களில் இருந்து சுமார் 4.16 லட்சம் மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
வெள்ளத்தில் சிக்கி 14 பேர் நேற்று ஒரேநாளில் உயிரிழந்ததையடுத்து, இதுவரை வெள்ளம் காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை சுமார் 149 ஆக உயர்ந்துள்ளது.