August 29, 2016 தண்டோரா குழு
பேருந்தில் பயணித்து கொண்டிருந்த போது மனைவி மரணமடைந்து விட்டதால் நடுவழியிலேயே சடலத்துடன் கணவரை இறக்கிவிட்ட கொடூர சம்பவம் மத்திய பிரதேச மாநிலத்தில் நிகழ்ந்துள்ளது.
இந்தியாவின் வட கிழக்கு கடலோர மாநிலமான ஒடிசாவில் மனைவியின் சடலத்தை கொண்டு செல்ல இலவச அமரர் ஊர்தி தரப்படாததால் சுமார் 10 கிலோ மீட்டர் தூரம் அதைக் கணவரே சுமந்த சென்ற சம்பவம் நாட்டை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.
இந்நிலையில்,மத்திய பிரதேச மாநிலத்தில் ஒரு பேருந்தில் பயணம் செய்து கொண்டிருக்கும் போது உடல் நலக்குறைவால் இறந்த மனைவியுடன் இளைஞர் ஒருவரை அந்தப் பேருந்தில் இருந்து இறக்கிவிடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேச மாநிலம் தாமோ மாவட்டத்தைச் சேர்ந்தவர் ராம் சிங் லோதி இவரது மனைவியின் பெயர் மல்லி பாய்.ராம் சிங்கின் மனைவி கடந்த சில நாட்களாகவே உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்துள்ளார்.
இந்நிலையில் உடல் நலம் சரியில்லாத மனைவியை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல தனது 5 மாத குழந்தை மற்றும் அவருடைய தாயாருடன் தனியார் பேருந்தில் சென்று கொண்டிருந்தார்.அப்போது அவரது மனைவி பேருந்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதனை அறிந்த பேருந்து நடத்துனர் அவர்களைப் பாதி வழியிலேயே இறங்கச் சொல்லி வற்புறுத்தியுள்ளார்.ராம் சிங் எவ்வளவோ கெஞ்சியும் அவர் கொஞ்சம் கூட கண்டு கொள்ளவில்லை.ஈவிரக்கமில்லாமல் நடுக்காட்டில் அவர்களை வலுக்கட்டாயமாக இறக்கிவிட்டுள்ளார் அந்த கல் நெஞ்சுக்காரர்கள்.
மேலும்,இறந்த மனைவியை மருத்துவமனைக்குக் கொண்டு செல்வதா அல்லது வீட்டுக்கு கொண்டு செல்வதா என்று செய்வதறியாது தவித்துள்ளார் ராம் சிங்.இறக்கிவிடப்பட்ட இடத்தில் இருந்து மருத்துவமனைக்குச் செல்ல சுமார் 20 கிலோமீட்டர் பயணம் செய்ய வேண்டும்.
இந்நிலையில் அந்த வழியாக ஹசாரி மற்றும் ராஜேஷ் படேல் என்ற இரு வழக்கறிஞர்கள் சென்று கொண்டிருந்தனர்.ராம் சிங் அந்த வனப்பகுதியில் நின்று கொண்டு இருப்பதைப் பார்த்த அவர்கள் அது குறித்து விசாரித்துள்ளனர்.ராம் சிங் நடந்தவற்றை அவர்களிடம் தெரிவித்துள்ளார்.இவர்களின் பரிதாபமான நிலைமையை அறிந்த அவர்கள் ராம் சிங்க்கு உதவ முன்வந்தனர்.அவர்களில் ஒருவர் அருகில் இருந்த காவல் நிலையத்திற்குத் தகவல் அளித்துள்ளனர்.
காவல்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து விவரங்களைச் சேகரித்துக் கொண்டு எந்த உதவியும் செய்யாமல் சென்று விட்டனர் என்று படேல் தெரிவித்தார்.மேலும் அந்த வழக்கறிஞர்கள் ஒரு தனியார் ஆம்புலன்ஸ்க்கு தகவல் தந்து ராம் சிங் மனைவியின் உடலை அவர்கள் வீட்டிற்குக் கொண்டு செல்ல உதவி செய்தனர்.
இந்தச் சம்பவத்தை குறித்து கேள்வி எழுப்பிய போது,அத்தகைய நிகழ்வு குறித்து ஒன்றும் அறிவிக்கப்படவில்லை என்று பதியாகர் காவல்நிலையத்தின் அதிகாரி பி.டி.மின்ஜ் தெரிவித்தார்.இது அதைவிடக் கொடுமையான விசயமாக உள்ளது.