August 29, 2016 தண்டோரா குழு
ஒலிம்பிக் போட்டியில் தங்கம்,வெள்ளி,மற்றும் வெண்கலம் ஆகிய பதக்கங்களை தருவது குறித்து அனைவருக்கும் தெரியும்.ஆனால், நான்காவதாக தரப்படும் பதக்கத்தைக் குறித்து யாருக்காவது தெரியுமா?
இந்த மிகவும் அரிய நான்காவது பதக்கத்தின் பெயர் ‘பியர் டி குபெர்டின்’ என்பதாகும்.
இந்தப் பதக்கத்தை மற்ற மூன்று பதக்கத்தை போல எளிதில் வெல்ல முடியாது.எனினும்,விளையாட்டு வீரர்களுக்கான ஒழுக்கத்தைக் குறித்து அதிகமாக இந்தப் பதக்கம் பேசும்.எனவே,அது தங்கப் பதக்கத்தை விட மேலானதாகும்.
பிரேசில் நாட்டின் தலைநகரான ரியோ டி ஜெனீரோவில் நடைபெற்ற ரியோ 2016 ஒலிம்பிக் போட்டியின் போது, நிக்கி ஹம்ப்ளின் மற்றும் அப்பே டி அகோச்டினோ என்னும் இரண்டு தடகள வீரர்கள் இந்த விஷேசமான பியர் டி குபெர்டின் விருதிற்குப் பரிந்துரை செய்யப்பட்டனர்.இதற்குக் காரணம் என்னவென்றால் தடகள போட்டியின் போது நேர்ந்த மோதலில் கீழே விழுந்த இருவரும் ஒருவருக்கு ஒருவர் உதவி செய்து ஓட்டம் முடியும் இடம் வரை ஓடினர்.
இவர்களுடைய இந்தச் செய்கை உண்மையான விளையாட்டு வீரர்களுக்கான ஒழுக்கத்தைப் பின்பற்றத்தக்க முன்னுதாரணமாக அமைக்கிறது.மேலும்,இந்தப் பதக்கம் ‘உண்மையான விளையாட்டு வீரர்களுக்கான ஒழுக்கம்’ என்றும் அழைக்கப்படுகிறது.
மேலும்,சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியால் இந்த அரியப் பதக்கம் தரப்படுகிறது.இந்தப் பதக்கம்,ஒழுக்கத்தைக் கடைப்பிடிக்கும் தடகள வீரர்கள்,முன்னாள் தடகள வீரர்கள்,விளையாட்டுக்கு ஊக்கமளிப்போர் மற்றும் விளையாட்டு அதிகாரிகளுக்கு வழங்கப்படுகிறது.
பிரெஞ்சு நாட்டின் வரலாற்றாசிரியர்,கல்வியாளர் மற்றும் குபெர்டின் குடும்பத்தின் பிரபுவாக இருந்த,பியர் டி பிரெடி, சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியை நிறுவினார்.இந்தப் பதக்கம் அவருடைய நினைவால் கொடுக்கப்படுகிறது.ஆனால், இந்தப் பதக்கம் ஒவ்வொரு ஒலிம்பிக் போட்டியிலும் தரப்படுவதில்லை.
இந்தப் பதக்கத்தை பெறுவதற்கு ஒருவர் உண்மையிலேயே தகுதியுடையவர் என்று உணர்ந்தால் மட்டுமே சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி அதைத் தருகிறது.தற்போது நடந்து முடிந்த ஒலிம்பிக் போட்டிக்கு முன் சுமார் 17 முறை இந்த அரியப் பதக்கம் தரப்பட்டுள்ளது.லஸ் லாங் என்னும் ஜேர்மன் நாட்டைச் சேர்ந்து நீளம் தாண்டும் வீரர் 1964ம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் முதல் முதலாக இந்தப் பதக்கத்தை வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.