August 30, 2016 தண்டோரா குழு
இந்திய தலைநகரான புது டெல்லியின் பல்வேறு பகுதிகளில் பெய்த கன மழை காரணமாக கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.இதனால் இந்தியாவிற்கு வந்துள்ள அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஜான் கெர்ரி டெல்லி விமான நிலையத்தில் இருந்து வெளியே வர முடியாமல் தவித்து வந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
புது டெல்லியில் நேற்று காலை முதல் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.இதனால் அங்குள்ள பல முக்கிய இடங்களில் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.டெல்லி நகரச் சாலைகளில் சிக்கி கொண்ட வாகனங்கள் மெல்ல மெல்ல ஊர்ந்து சென்றதால் பொதுமக்களும்,வாகன ஓட்டிகளும் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
மேலும்,இந்திய சுற்றுலாப் பயணத்திற்கு அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் கெர்ரியுடன் வந்த பத்திரிகையாளர் தனது டிவிட்டர் பக்கத்தில் புது டெல்லியில் பெய்த மழையால் மற்ற எல்லோரைப் போல் கெர்ரியும் அங்கு நேர்ந்த போக்குவரத்து நெரிசலில் சிக்கினர் என்று பதிவிட்டார்.
இந்நிலையில்,இந்தியாவுடன் வர்த்தகம் சம்பந்தமான பேச்சுவார்த்தைக்காக இந்திய வந்த அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஜான் கெர்ரி டெல்லி விமான நிலையத்தில் இறங்கிய பின்பு கடுமழையால் ஏற்பட்ட போக்குரவத்து நெருக்கடியின் காரணமாக,விமான நிலையத்தில் இருந்து தெற்கு டெல்லியில் உள்ள சாணக்யபுரியில் உள்ள ஒரு விடுதிக்குச் செல்ல முடியாமல் தவித்து வருவதாகச் செய்திகள் வெளியாகின.
மேலும்,புது டெல்லி மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் இன்றும் மழை தொடரும் என்று அறிவிக்கப்பட்டிப்பதால், இதே போன்ற போக்குவரத்து நெருக்கடி ஏற்படலாம் என்று டில்லி வாழ் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.