August 31, 2016 தண்டோரா குழு
வட மேற்கு மாநிலமான குஜராத் மாநிலத்தில் அணை திறப்பு நிகழ்ச்சியில் படமெடுக்க ஓடிய பத்திரிகையாளர்களை சைகை செய்து தடுத்து நிறுத்தி அவர்களது உயிரைப் பிரதமர் மோடி காப்பாற்றியதாக அம்மாநில துணை முதல்வர் நிதின் பட்டேல் தெரிவித்துள்ளார்.
குஜராத் மாநிலத்தில் உள்ள ஜாம்நகர் மாவட்டத்தில் சாவ்னி திட்டத்தின் கீழ் ஆஜி அணை திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி நேற்று திறந்து வைத்து நாட்டுக்கு அர்ப்பணித்தார். அணையைத் திறக்கும் பொத்தானைப் பிரதமர் அழுத்திய போது உடனடியாக அணையில் இருந்து தண்ணீர் பெருக்கெடுத்து ஓடிவரும் காட்சியைப் படம் பிடிப்பதற்காகத் தண்ணீர் வெளியேறும் பகுதியை நோக்கி புகைப்பட வல்லுனர்கள் ஓடத் தொடங்கினர்.
அதை மேடையிலிருந்து கவனித்த பிரதமர் மோடி, அணை திறக்கப்பட்டவுடன் பாய்ந்தோடிவரும் தண்ணீரின் ஆரம்பகட்ட வேகம், பத்திரிகையாளர்களை அடித்துச் சென்றுவிடும் என்பதை உணர்ந்தார். உடனடியாக தனது கைகளைத் தட்டி ஓசை எழுப்பியும், பல்வேறு வகைகளில் சைகை செய்தும் பத்திரிகையாளர்களை உடனடியாக அங்கிருந்து செல்லுமாறு எச்சரிக்கை செய்தார்.
பிரதமர் மோடியின் முன்னெச்சரிக்கையால் பல பத்திரிகையாளர்கள் விபரீதத்தில் இருந்து காப்பாற்றப்பட்டு விட்டதாகவும் அப்படி உரிய நேரத்தில் சைகை செய்யாமல் இருந்திருந்தால் பலரும் அந்தத் தண்ணீரின் வேகத்தில் அடித்துச் செல்லப்பட்டிருப்பார்கள் என்றும் குஜராத் மாநில துணை முதல்வர் நிதின் பட்டேல் தெரிவித்துள்ளார்.