August 31, 2016 தண்டோரா குழு
பெண்கள் மீது பணத்தை வீச அது ஒன்றும் வெள்ளித்திரை அல்ல, நடனமாடும் அழகிகளுக்கு என்று சில கண்ணியம் இருக்கிறது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
அண்மையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் நட்சத்திர விடுதிகளில் அழகிகளின் நடனத்துக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. இதையடுத்து, அழகிகளின் நடனத்தை ஒழுங்குபடுத்தும் வகையில், மாநில அரசு சில கட்டுப்பாடுகளைக் கொண்டு வந்தது.
அதன்படி, நடனமாடும் அழகிகளை வாடிக்கையாளர்கள் சூழ்ந்து கொண்டு அவர்கள் மீது பணத்தை வீசக்கூடாது என்றும், அழகிகளின் நடனம் நடைபெறும் இடத்துக்கு அருகில் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும் என்றும் சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டது.
மேலும், இதனை எதிர்த்து நட்சத்திர விடுதிகளின் உரிமையாளர்கள் உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தனர். அந்த மனு நேற்று நீதிபதிகள் தீபக் மிஸ்ரா மற்றும் சி.நாகப்பன் ஆகியோர் முன் விசாரணைக்கு வந்தது.
விடுதிகளின் உரிமையாளர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், நடன அழகிகள் மீது பணத்தை வீசுவது அவர்களுக்குக் கொடுக்கும் டிப்ஸ் போன்றது என்று கூறினார்.
இதனை மறுத்த நீதிபதிகள் சில கருத்துகளைத் தெரிவித்தனர். மாநில அரசின் சட்ட திருத்தம் பெண்களின் கண்ணியத்துக்கும் மதிப்பு அளிக்கிறது. மதுபான விடுதிகளில் நடனமாடும் அழகிகள் மீது பணத்தை வீசுவது அவர்களின் கண்ணியத்துக்கு எதிரானது.
பெண்கள் மீது பணத்தை வீச அது ஒன்றும் வெள்ளித்திரை அல்ல, நடனமாடும் அழகிகளுக்கு என்று சில கண்ணியம் இருக்கிறது என்று தெரிவித்தனர்.
மேலும், இந்த விவகாரத்தில் 6 வாரத்துக்குள் பதில் அளிக்குமாறு மகாராஷ்டிரா மாநில அரசுக்கும் நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.