September 1, 2016 தண்டோரா குழு
இந்திய தலைநகர் டெல்லியில் ஆம்ஆத்மி கட்சி தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது.டெல்லி முதல்வராக அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளார்.அவ்வப்போது சர்ச்சையில் சிக்கும் அமைச்சர்களால் கெஜ்ரிவாலுக்கு பிரச்சனை ஏற்படுகிறது.
முதன்முறையாகச் சட்டப்படிப்பு படித்ததாகப் போலி சான்றிதழ் சமர்ப்பித்த வழக்கில் டெல்லி மாநில சட்ட அமைச்சராக ஜிதேந்தர் தோமர் காவல்துறையால் கைது செய்யப்பட்டார்.அதைத் தொடர்ந்து அவரது பதவியை ராஜினாமா செய்தார்.
இந்நிலையில் ஆம்ஆத்மி அரசில் உணவுத்துறை அமைச்சராக இருந்து வந்தவர் ஆஷிம்கான். இவர் உணவுத்துறையில் கான்ட்ராக்ட் விட்டதில் சிலருடன் பேரம் பேசியதாக புகார் எழுந்தது.இது குறித்து எழுத்துப்பூர்வமான குற்றச்சாட்டு மற்றும் ஒரு மணி நேரம் ஓடும் ஆடியோ டேப் ஒன்றும் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் கவனத்துக்கு வந்தது.
இந்தத் தகவல் வெளியே பரவும் முன்னதாக தாமே முன்வந்து அமைச்சரை நீக்குவதாகப் பத்திரிகையாளர்களிடம் அறிவித்தார் கெஜ்ரிவால்.
அதேபோல் மற்றொரு சம்பவம் மீண்டும் நடந்துள்ளது.டெல்லி அமைச்சரவையில் சமூக நலம்,பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சராக இருந்தவர் சந்தீப்குமார்(36).இவர் தொடர்பான சி.டி. ஒன்று முதல்வரின் பார்வைக்கு சென்றுள்ளது.
அதில் இரண்டு பெண்களுடன் உல்லாசமாக இருப்பது போன்ற காணொளி மற்றும் புகைப்படங்கள் இருந்தது. இதையடுத்து அவரை உடனடியாக அமைச்சரவையில் இருந்து நீக்க கெஜ்ரிவால் உத்தரவிட்டார்.
கடந்த ஆண்டு டெல்லியில் நடைபெற்ற தேர்தலுக்காக டெல்லி முதல்வர் தேர்ந்தெடுத்த வேட்பாளர்களின் நடவடிக்கைகளைக் குறித்து கெஜ்ரிவாலுக்கு முன்பே எச்சரிக்கை செய்ததாக அக்கட்சியின் முன்னால் மந்திரிகள் யோகேந்திர யாதவ் மற்றும் பிரஷாந்த் புஷன் தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.