October 17, 2018
தண்டோரா குழு
கடந்த 2010ம் ஆண்டு கௌதம் மேனனின் இயக்கத்தில் சிம்பு,த்ரிஷா நடிப்பில் வெளிவந்த படம் விண்ணைத்தாண்டி வருவாயா.மாபெரும் வெற்றி பெற்ற இப்படம் சிம்புவின் திரை பயணத்தில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தியது.
இப்படத்திற்கு பின் சிம்பு கெளதம் மேனன் கூட்டணி அஞ்சம் என்பது மடமையடா படத்திற்காக மீண்டும் இணைந்தது.இவ்விரு படங்களுக்கும் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார்.இதற்கிடையில்,இப்படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கவுள்ளதாக இயக்குநர் கௌதம் மேனன் தெரிவித்துள்ளார்.
விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் தொடர்ச்சியாகவே இப்படம் இருக்குமாம்,அதாவது கார்த்திக் தற்போது என்ன செய்து கொண்டிருக்கிறார் என்பது தான் படத்தின் கதையாம்.எனினும் இதுகுறித்த எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.
மணிரத்னத்தின் செக்க சிவந்த வானம் படத்திற்கு பின் சிம்பு தற்போது சுந்தர் சி இயக்கத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை தொடர்ந்து சிம்பு வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்பட்டது.
இந்நிலையில்,அண்மையில் சிம்பு இயக்குநர் கெளதம் மேனன்,ஏ.ஆர்.ரஹ்மான் மூவரும் சந்தித்து செல்பி எடுத்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.இதனால்,சிம்பு – இயக்குநர் கெளதம் மேனன் – ஏ.ஆர். ரஹ்மான் கூட்டணி மீண்டும் இணையவுள்ளதாக கூறப்படுகிறது.எனினும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.