September 2, 2016 தண்டோரா குழு
வாழ்நாள் சாதனையாளருக்கான ஆஸ்கர் விருது பிரபல ஹாலிவுட் நடிகர் ஜாக்கி சானுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜாக்கிசான் என்றாலே உலக அளவில் சண்டைப்பட பிரியர்களுக்கு உற்சாகம் தான்.ஹாங்காங்கில் பிறந்த 62 வயதாகும் ஜாக்கிச் சான் அதிரடிப் படங்களில் நடித்து அசாத்தியமான சண்டைக் காட்சிகளின் மூலம் தனது திறமையை வெளிப்படுத்தியவர்.
மேலும், ஹாலிவுட் திரைப்படங்களில் காலடி வைத்து ரஷ் ஹவர், கராத்தே கிட் போன்ற திரைப்படங்களில் நடித்துப் புகழ் பெற்றவர்.ஹாலிவுட் திரையுலகில் பொன்விழா காணும் ஜாக்கி சான், நடிகர், தற்காப்புக் கலை நிபுணராக மட்டுமின்றி, தயாரிப்பாளர், இயக்குநர், பாடகர் என்றும் முத்திரை பதித்தவர்.
மேலும், தற்காப்புக் கலையை திரைப்படத்தில் பயன்படுத்தி அதன் மூலம் மக்களைக் கவர்ந்த ஜாக்கிசான் தனது 8 வயது முதல் நடிக்கத் தொடங்கியவர்.எழுத்தாளராகவும், இயக்குநராகவும் முப்பதுக்கும் மேற்பட்ட திரைப்படங்களை ஹாங்காங்கில் எடுத்துள்ளார்.
இந்தியாவிலும் குறிப்பாக தமிழகத்திலும் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். உலகிலேயே அதிக சம்பளம் பெறும் இரண்டாவது நடிகர் என்று ஃபோர்ப்ஸ் பத்திரிகை இவரைப் பட்டியலிட்டிருந்தது.இதுவரை ஆஸ்கர் விருது பெறாத ஜாக்கி சானுக்கு முதல் முறையாகக் கவுரவ ஆஸ்கர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.இதற்கான அறிவிப்பை “தி அகாடமி ஆப் மோசன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ்” அமைப்பு அறிவித்துள்ளது.மேலும், ஜாக்கி சானின் திரைப்பட பயணத்தை கௌரவிக்கும் வகையில் இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய நாட்டின் திரைப்பட பதிப்பாசிரியர் அன்னி கோட்ஸ், காஸ்டிங் இயக்குநர் லின் ஸ்டால் மாஸ்டர் மற்றும் ஆவண திரைப்பட தயாரிப்பாளர் ரெட்ரிக் வைஸ்மேன் மூவரும் கவுரவ ஆஸ்கர் விருதைப் பெறுகின்றனர்.
இவர்களுக்கு நவம்பர் 12 தேதி அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெறும் விழாவில் இந்தப் பெருமைக்குரிய விருதுகள் வழங்கப்படவுள்ளது.