September 3, 2016 தண்டோரா குழு
பிலிப்பைன்ஸ் நாட்டில் தாவோ நகரத்தில் சக்தி வாய்ந்த குண்டு வெடித்ததில் சுமார் 14 பேர் பலியாகியுள்ளனர் 67பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
பிலிப்பைன்ஸ் நாட்டின் தாவோ நகரில் நேற்று இரவு நேர மார்கெட் பகுதியில் திடீரென குண்டுவெடிப்பு நடந்துள்ளது. இதில் சுமார் 14 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர். 67 பேர் படுகாயமடைந்துள்ளனர். அவர்களில் 24 பேரின் உடல் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாகவும் எனவே பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சுற்றுலாப் பயணிகள் அதிகமானோர் வந்து தங்கும் மார்கோ போலோ ஓட்டல் அருகில் இந்தக் குண்டு வெடிப்பு நடந்துள்ளதால் சுற்றுலா பயணிகள் பீதியடைந்துள்ளனர். இறந்தவர்கள் அல்லது படுகாயம் அடைந்தவர்களின் எத்தனைப் பேர் வெளிநாட்டினர் என்ற விவரம் இதுவரை தெரிவிக்கப்படவில்லை.
இந்தச் சம்பவம் குறித்து கருத்து தெரிவித்துள்ள அதிகாரிகள், இது கடந்த இரு தினங்களுக்கு முன் ராணுவத்தால் இரு தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டதற்குப் பழிவாங்கும் நோக்கமாகத் தெரியவருகிறது எனக் குறிப்பிட்டுள்ளனர். இதையடுத்து நாட்டின் பாதுகாப்பு முழுவதும் காவல்துறையின் கையில் இருந்து ராணுவத்தின் கையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.