September 6, 2016 தண்டோரா குழு
ஜி 20 மாநாட்டில் பங்கேற்பதற்காக சீனா சென்றுள்ள பிரதமர் மோடி, அந்நாட்டின் அதிபர் ஜி ஜின்பிங்கை நேற்று சந்தித்தார். அப்போது, இரு நாட்டுத் தலைவர்களும், இந்தியா, சீனா இடையிலான உறவுகளில் நீடிக்கும் சிக்கல் தொடர்பாகத் தீவிர ஆலோசனை நடத்தினார்.
சீனா நாட்டில் உள்ள ஹாங்சோ நகரில் நடைபெறும் உச்சி மாநாட்டில் ஜி 20 அமைப்பில் இடம்பெற்றுள்ள நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் கலந்துகொள்கின்றனர். இம்மாநாட்டில் கலந்துகொள்வதற்காக, அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, இந்திய பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் தலைவர்கள் சீனா சென்றுள்ளனர்.
உலகின் பல்வேறு தலைவர்கள் கலந்து கொள்ளும் இந்த மாநாட்டில் உலக பொருளாதாரம் மற்றும் புவி சார்ந்த அரசியல் மற்றும் தீவிரவாதம் தொடர்பான ஆலோசனை நடைபெறவுள்ளது. அதைத் தொடர்ந்து பருவநிலை மாற்றம் தொடர்பாக முக்கிய தீர்மானம் நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், ஜி 20 மாநாட்டில் கலந்து கொள்வதற்கு முன், சீன அதிபர் ஜி ஜின்பிங்ஐ பிரதமர் மோடி நேற்று சந்தித்தார். ஹாங்சோ நகரில் உள்ள வெஸ்ட் லேக் அரசு விருந்தினர் மாளிகையில் நடைபெற்ற இந்தச் சந்திப்பின்போது, கிர்கிஸ்தானின் தலைநகர் பிஷ்கெக்கில் அமைந்துள்ள சீனத் தூதரகத்தின் மீது பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலுக்குப் பிரதமர் மோடி கடும் கண்டனம் தெரிவித்தார்.
மேலும், இரு நாடுகளுக்கும் இடையிலான பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் பிரதமர் மோடியும் ஆலோசனை நடத்தி உள்ளனர். இந்தச் சந்திப்பின்போது, மோடி தலைமையிலான வெளியுறவுத்துறை செயலர் ஜெய்ஷங்கர், தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித்தோவல் உள்ளிட்டோர் அடங்கிய குழுவினரும், ஜிங்பிங் தலைமையிலான அந்நாட்டின் உயர்மட்ட அதிகாரிகள் அடங்கிய குழுவினரும் பங்கேற்றனர்.
மேலும், சர்வதேச பயங்கரவாத நாடுகளின் பட்டியலில் பாகிஸ்தானை இணைக்கும் ஐக்கிய நாடுகள் சபையின் அறிவிப்புக்குச் சீனா தடையாக உள்ளது. இதேபோல், சர்வதேச அணு வினியோகஸ்தர்கள் கூட்டமைப்பில் நமது நாடும் இடம் பெறுவதற்குச் சீனா சில நிபந்தனைகளை விதித்துள்ளது.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் உள்ள காஷ்மீர் பகுதியில் சீனா பாகிஸ்தான் வர்த்தக பொருளாதார மண்டலத்தை சுமார் 46 பில்லியன் டாலர்கள் செலவில் சீனா அமைத்து வருகிறது. அதற்கான விவகாரங்கள் தொடர்பாக சீன அதிபரும் மற்றும் அந்நாட்டின் பிரதமருடன், நமது பிரதமர் மோடி முக்கிய பேச்சுவார்த்தை நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜி20 உச்சி மாநாட்டின் இறுதிக் கட்டமாக அமெரிக்க அதிபர் ஒபாமாவை பிரதமர் மோடி சந்தித்து பேசவுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.