September 6, 2016 தண்டோரா குழு
மலேசியா நாட்டின் தலைநகரான கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையத்தில் மலேசியாவுக்கான இலங்கை தூதர் இப்ராஹிம் அன்சார், ஞாயிற்றுக்கிழமையன்று தாக்கப்பட்ட சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது இதையடுத்து, மலேசிய காவல்துறை சந்தேகத்தின் பேரில் 5 நபர்களைக் கைது செய்துள்ளனர்.
கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையத்தை விட்டு இப்ராஹிம் அன்சார் வெளியேறிய போது, அங்குத் தமிழில் கோஷமிட்டவாறு வந்த ஒரு குழுவால் தாக்கப்பட்டார். மேலும், மலேசியாவுக்கு நாடாளுமன்ற குழுவுடன் சேர்ந்து ஒரு மாநாட்டில் கலந்து கொள்ள முன்னாள் இலங்கை அதிபர் மஹிந்த ராஜபக்ஷ மலேசியா வந்துள்ள சமயத்தில், இந்தத் தாக்குதல் நடந்துள்ளது.
சில தமிழ் ஆதரவு குழுக்கள், மஹிந்த ராஜபக்ஷவின் மலேசிய வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். கோலாலம்பூரில் இலங்கையைச் சேர்ந்த ஒரு புத்த மத துறவி மீது தாக்குதல் நடைபெற்றுள்ளதாகவும் சில ஊடக தகவல்கள் தெரிவித்துள்ளன.
இந்நிலையில் இலங்கை தூதர் மீது நடந்த தாக்குதல் குறித்த சிசிடிவி வீடியோ பதிவு சமூகவலைத்தளங்களில் தற்போது பரவி வருகிறது.
இப்ராஹிம் அன்சரை தாக்கியவர்கள், ‘ராஜபக்ஷ’, ‘இலங்கை தூதர்’ ஆகியவர்கள் குறித்து கோஷமிட்டது தெளிவாக கேட்டதாகக் கூறப்படுகிறது. மேலும், மருத்துவ பரிசோதனைக்காக, அங்குள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் இப்ராஹிம் அன்சார் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவத்தில் தொடர்புடைய சந்தேக நபர்கள் மலேசியாவைச் சேர்ந்த தமிழர்கள் தான் இந்தத் தாக்குதலை நடத்தியதாக மலேசிய காவல்துறையை சேர்ந்த ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார். மேலும், இவர்களில் யாரும் இலங்கையைச் சேர்ந்தவர்களோ அல்லது இந்தியர்களோ இல்லை என்று அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.
இலங்கையில் நடந்த உள்நாட்டுப் போரின் போது, தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டதாகவும், அதனால் தாங்கள் சினம் அடைந்துள்ளதாகவும், கைது செய்யப்பட்டுள்ள நபர்கள் காவல்துறை அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளனர்.
இந்தத் தாக்குதல் சம்பவத்தையடுத்து, மலேசியாவில் உள்ள இலங்கை தூதரகத்துக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக மலேசிய காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கடந்த 2009ம் ஆண்டு ராணுவ ரீதியாக இலங்கை ராணுவத்தால் தோற்கடிக்கப்பட்ட தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு சில மலேசிய தமிழர்கள் அவர்களுக்குப் பலத்த ஆதரவு அளித்து வருவதாகக் கூறப்படுகிறது.
நேற்று கோலாலம்பூரில் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய மலேசிய காவல்துறை அதிகாரி காலிட் அபு பேகர், மலேசியாவில் உள்ள தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் இயக்க ஆதரவாளர்கள் கூட்டமானது ஐ.நா சபையால் தடைசெய்யப்பட்ட ஒன்றாகும் என்றும் அவர்களுக்கு இவ்வாறு மீண்டும் நடந்து கொண்டால் கடுமையான தண்டனை தரப்படும் என்று கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார்.