September 8, 2016 தண்டோரா குழு
இந்திய கிரிக்கெட் வீரர் பிரக்யான் ஓஜா உள்ளூர் விளையாட்டில் பங்கேற்றபோது பந்து தலையில் பட்டதால் மயங்கி விழுந்தார். இதனால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்தியாவின் ஸ்பின் பவுலரான பிரக்யான் ஓஜா தற்போது உள்ளூர் போட்டிகளில் பங்கேற்று வருகிறார். இந்நிலையில் இன்று உள்ளூர் கிரிக்கெட் தொடர்களில் ஒன்றான துலிப் டிராபியில் இந்தியா ப்ளூ மற்றும் இந்தியா கிரீன் ஆகிய அணிகள் மும்பையில் மோதின.
அதில் கிரீன் அணியின் இறுதி ஆட்டக்காரரான பங்கஜ் சிங் என்பவர் அடித்த பந்தை தாவிப்பிடிக்க முற்பட்ட பிரக்யான் ஓஜாவின் முன் விழுந்த பந்து விரைவாக எழுந்து அவரது காது அருகே பட்டது. இதில் வழியால் துடித்த அவர் மயங்கி விழுந்தார்.
இதையடுத்து அவர் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அப்போது கிரீன் அணியின் பயிற்சியாளர் W.V.ராமன் உடனிருந்தார்.
இது குறித்து செய்தி வெளியிட்டுள்ள பி.சி.சி.ஐ யின் செய்திப்பிரிவு பொது மேலாளர் அம்ரித் மதூர் கூறும்போது, தான் ஓஜா அனுமதிக்கப்பட்ட மருத்துவமனையில் விசாரித்ததாகவும், ஒருமணிநேர சிகிச்சைக்குப்பின் அவருக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை என மருத்துவர்கள் தெரிவித்ததாகவும் தெரிவித்தார்.
அதுமட்டுமின்றி அவரிடமே தான் பேசியதாகத் தெரிவித்த அவர் உடல்நலம் குறித்து கவலைப்படத் தேவையில்லை எனவும் அவர் விரைவில் குணமடைவார் எனவும் தெரிவித்தார்.