September 15, 2016 தண்டோரா குழு
பீகார் மாநிலத்தில் உள்ள வைஷாலியில் இறந்த மனிதனின் சடலத்தை இரு காவலர்கள் இழுத்துச் சென்ற சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
பீகாரில் வைஷாலி மாவட்டத்தைச் சேர்ந்த மக்கள் கங்கை ஆற்றில் இறந்து கிடந்த மனிதனைப் பற்றி காவலர்களுக்குத் தகவல் தெரிவித்துள்ளனர்.
தகவல் அறிந்து 2 மணி நேரம் கழித்து வந்த போலீசார் சடலத்தை வெளிக்கொணர்ந்துள்ளனர்.நோயாளிகளை ஏற்றிச் செல்லும் வண்டி ,மற்றும் உதவியாளர்கள் ஏதுமில்லாத காரணத்தினால் அவ்விரு போலீசாரும் சடலத்தின்
கழுத்தில் கயிற்றைக் கட்டி 100 மீட்டர் தொலைவு இழுத்துக் கொண்டே சென்றுள்ளனர்.
இதைப் பார்த்த பொதுமக்கள் பலரும் காவலர்களின் ஈரமற்ற செயலுக்கு இன்னுமொரு சான்று எனப் பதிவு செய்து சமூக வளைத்தளத்தில் பரவவிட்டுள்ளனர்.அதன் விளைவாக இரு காவலர்களும் இடை நீக்கம் செய்யப்பட்டனர்.
இதே மாவட்டத்தில் சில வருடங்களுக்கு முன்பு வன்முறைக் கும்பலால் கொல்லப்பட்ட 10 பேரை ஆற்றில் வீசி எறிந்து விட்டு ,சடலங்களை எரித்துவிட்டதாகக் காவலர்கள் பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது.
இங்கு மட்டுமின்றி ஒரிசாவிலும் நோயாளிகளின் வண்டி மறுக்கப்பட்ட காரணத்தினால் தான், மஜி என்பவர் தனது மனைவியின் சடலத்தை கிராமம் வரை சுமந்து சென்ற சம்பவம் மக்களிடையே மனித நேயம் குறைந்து வருவதைக்
காட்டுகிறது.